பக்கம்:மறைமலையம் 3.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
181

கொண்டு, அதன் உதவியால் அம் மேல் நாடுகளிலிருந்த உயிர்களை நோய் முதலிய துன்பங்களினின்று நீக்கி, அவைகளுக்கு மிகுந்த நலத்தை உண்டுபண்ணி வந்தார். இம் மெசுமர் என்னும் பெரியவர் நல்ல ஒருமைப் பழக்கம் உடையவராய் இருந்திருக்கவேண்டும். இவர் தம்மிடம் வந்த பலவகைப்பட்ட நோயாளிகளையெல்லாம் தமது கையால் தொடுதல் ஒன்றானே நோய் நீக்கி நலப்படுத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

உயிர்கள் ஒவ்வொன்றனிடத்தும் பிராணசக்தி (Animal Mag- netism) யென்று சொல்லப்படுவதாகிய ஓர் ஆற்றல் இருக்கிறதென்றும், அதனை ஒருவன் தன்னிடத்தில் மிகுதிப்படுத்திக் கொண்டு பிறகு அதனைத் தன்னிலிருந்து பிறவுயிருக்கும் பாயும்படி செய்யவல்லவனானால், அதனால் அவ்வுயிர் நோய் முதலிய துன்பங்களினின்று விலகி நலம் பெறும் என்றும், அவ்வாறு அதனைப் பாய்ச்சுங்கால் பிறவுயிரை அறிவோடு கூடி நிகழும் ஒரு வகையான தூக்கத்திற் போகும்படி செய்தல் வேண்டுமென்றும், தன்னிலிருந்து அதனைப் பிறவுயிர்க்குப் பாய்ச்சுவதற்குத் தன் கையினால் அவ்வுயிரின் உடம்பிலுள்ள சில முதன்மையான இடங்களைத் தொடுதலே போதுமென்றும் அவர்தம் மாணாக்கர்களுக்குக் கற்பித்து வந்தனர். இங்ஙனம் அவர் இவ்வரிய பெரிய வித்தையைத் தம் மாணாக்கர் பலருக்குக் காண்பித்தும், அதனைப் பயன்படுத்தும் முறையைத் தாமே செய்து காட்டியும் வந்தமையால் இது மேல்நாட்டிற் பலவிடங்களிற் பரவலாயிற்று. பிறகு மேல் நாட்டிலிருந்து கீழ் நாடாகிய அமெரிக்காவில் உள்ளார். இதனைக் கற்றுக்கொண்ட வுடனே இவர்களின் விடாமுயற்சியாலும் நுண்ணிய நூலாராய்ச்சியாலும் இது மிகவும் விளக்கமுறத் துலங்கலாயிற்று.

இப்போது இவ்வித்தையைக் கற்பிக்கும் உயர்ந்த கல்விச் சாலைகள் எத்தனையோ அமெரிக்காவில் இருக்கின்றன; இதனைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் எத்தனையோ இலட்சக்கணக்காய் அங்கே இருக்கின்றார்கள்; இதனைப் பயன்படுத்தி மக்களுக்கு அளவிறந்த நன்மைகளை விளைவிக்கும் உதவியாளர்களும் பலர்; இதனால் தீரா நோய் தீர்ந்தும் ஒழுக்கம் திருந்தியும் நல்லறிவு விளங்கப் பெற்றும் செல்வந் திரட்டியும் பயன் பெற்று வாழ்வோரும் பலர். இப்போது அமெரிக்காவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/214&oldid=1627661" இலிருந்து மீள்விக்கப்பட்டது