பக்கம்:மறைமலையம் 3.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
183

(சூக்குமசரீரம்), பண்புடல் (குணசரீரம்), போர்வையுடல் (கஞ்சுகசரீரம்), முதலுடல் (காரணசரீரம்) என்னும் பெயர்கள் உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றின் இயற்கையும் செயலும் ஞானசாகரம் மூன்றாம் பதுமத்திற் சிவராசயோகம் என்னுந் தலைப்பில் மிகவுந் தெளிவாக எடுத்து விளக்கிக் காட்டியிருக்கின்றோம்; அங்கே கண்டு கொள்க; இங்கெடுத்துக் காட்டப்புகுந்தால் இது மிக விரியும். இந்தப் பருவுடம்பிலும், வேறு இந்த நுண்ணுடம்புகள் நான்கிலும் நம்முடைய உயிர் போக்குவரவு செய்கின்றது. ஆயினும் இந்தப் பருவுடம்பில் நமது உயிர் முனைத்து நிற்கும்போது மட்டும் நமக்கு அறிவுவிளங்கக் காண்கிறோமே யல்லாமல், ப மற்றைய நுண்ணுடம்புகளில் அறிவுநிகழக் காண்கின்றோம் இல்லை. உயிர் பருவுடம்பில்முனைந்து நில்லாமல் நுண்ணுடம்பிற்சென்றவுடனே உறக்கம் வந்து கூடி அறிவைத் தலைக்காட்ட வொட்டாமல் அழுத்திவிடுகின்றது.

இதனைக் கொண்டு நுண்ணுடம்பிற் செல்லும் உயிர்களுக்கு அறிவு நிகழ்வதில்லையென்று சொல்லலாகுமோ வென்றால், மெல்லிய இயற்கை வாய்ந்த ஒரு சிறுவனை அறிதுயில் கொள்ளும்படி செய்தவுடனே, அவன் உயிர் வருவுடம்பை விட்டு நுண்ணுடம்பிற் செல்வதும், அங்ஙனஞ் சென்றதும் மிக்க அறிவுடையதாய்த் தோன்றுவதும் இஞ்ஞான்று பரவிவரும் புதிய பழக்கத்திற் செவ்வையாக விளங்குதலால் நுண்ணுடலிற் சென்ற உயிர்க்கு அறிவு மிகத் துலங்குவதும் உண்டென்பது பெறப்படுகின்றது. ஆகவே, நுண்ணுடலில் அறியாமையே உண்டென்று கூறுவது பொருந்தாது. அங்ஙனமாயின், நுண்ணுடம்பில் பெரும்பாலும் உயிர் அறியாமை வசப்பட்டு நிற்றலும், சிற்சில சமயங்களில் மட்டும் அறிவு மிக்குத் துலங்குதலும் என்னை யென்றால்; அவ்வாறு உயிர் இருதிறப்பட்டு நிற்றற்கு இருவேறு காரணங்கள் இருத்தல் வேண்டுமென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்குகின்றது. உயிரை அறியாமையில் அழுத்தும் மருள் என்னும் ஒரு காரணப் பொருளும், அதனை அறிவாய் விளங்கச்செய்தற்கு அருள் என்னும் ஒரு காரணப்பொருளும் இருக்கின்றன என்பது சிவஞானபோதம் முதலான மெய்யறிவு நூல்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/216&oldid=1627663" இலிருந்து மீள்விக்கப்பட்டது