பக்கம்:மறைமலையம் 3.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
189

மூச்சுக் கொண்டால் அவையெல்லாம் நீங்கிச் சிந்தை களங்கம்அற்று அமைதியாய் நிற்கும்.

சினம், வருத்தம், கவலை, அச்சம், பொறாமை முதலான இழிகுணங்களுக்கு இடந்தருவதனால் உடம்பிலுள்ள அகக்கருவிகள் விரைவில் நிலைகுலைந்து அழிகின்றன; ஆயுள் குறைந்து போகின்றது. எந்நேரமும் இவ்விழி குணங்களுக்கு ஆளாகி வருந்துபவர்களைக் கொள்ளை கொள்ள இயமன் வேண்டாம். இக்குணங்களே போதும். இக்குணங்களாற் பற்றப்படாமல் அமைதியாய் இருப்பவர்கட்கு உள்ள வலிமையும், இவற்றாற் பற்றப்பட்டுக் கலங்குபவர்கட்கு உள்ள வலிவின்மையையும் பழக்கத்திற் கண்டுகொள்க. ஆகவே, இவ்விழி குணங்கட்குச் சிறிதாயினும் இடஞ்செய்பவர்கள் திருவருளைச் சார்ந்திருத்தல் ஒருவாற்றானும் கைகூடமாட்டாது. ஆதலால் இவை தோன்றுமென்பது கண்டவுடனே ஏழுமுறை மூச்சு வாங்கும் முறையை வழுவாமல் பழகிவருக.

இங்ஙனம் மூச்சுக் கொள்ளுதலாலே மேற்சொல்லிய இழிகுணங்கள் தமது மும்முரங்கெட்டு அமைதிபெறும்; அவ்வாறு அவை அமைதிபெறாவிட்டால் அத்தீக்குணங்களுக்கு மாறான நற்குணங்களைச் சிந்திப்பதோடு நாம் அவ்விழிகுண வயப்பட்டு நடத்தல் பொருத்தந்தானாவென்று சிறிது ஆராயவுந் தலைப்படுக; அங்ஙனம் ஆராயத்தலைப்பட்டவுடனே அவை இருந்த இடமுந் தெரியாமல் மறைந்து போய்விடும். யாங்ஙனமெனிற் காட்டதும்.

கோபம்வரத் துவங்குமானால் அதற்கு மாறான சாந்த குணத்தைப்பற்றிச் சிந்தித்திடுக. சாந்தகுணம் உடையவர் எவரையேனும் நினைத்துப் பார்த்து அவர் முன்னிலையில் எத்தகையோரும் அமைதிபெற்று அகம்மகிழ்தலைச் சிந்தித்துப் பார்க்க. கோபமுடையவர் எவரையேனும் அதனை அடுத்து நினைத்துப்பார்த்து, அவர் முன்னிலையில் சிலர் அச்சம் அடைதலையும் வேறு சிலர் அவரைப்போலவே அவரோடு கோபித்துக் கலகம் இடுதலையும் எண்ணிக்கண்டு அதனால் வருந் தீமைகளை உன்னுக. கோபம் வரப்பெற்றவர்க்கு அவர் அறிவு நிலைகலங்கிப் போதல் கண்கூடாய்க் காணப்பட்ட உண்மை அன்றோ? எல்லா நன்மைகளையும் செய்தற்கும் அடைதற்கும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/222&oldid=1628256" இலிருந்து மீள்விக்கப்பட்டது