பக்கம்:மறைமலையம் 3.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
190

❖ மறைமலையம் - 3 ❖

பேருதவியாய் நிற்கும். அறிவு தன்நிலை குலைந்துபோகு மானால் கோபம் உடையவர் பித்தங் கொண்டவர்களைப் போல இன்னது செய்வதென்றறியாமல் எதனையுஞ் செய்தற்கு முந்துவர். இதனாலேதான் கோபம் உள்ளவர் கோபம் மிகுந்த வேளையில் கொலை முதலான கொடிய செய்கைகளைச் செய்து, தமது சினந்தணிந்த பிறகு தாம் அவற்றைச் செய்ததற்காகத் தம்மைத் தாமே நொந்து கொள்கின்றனர். கோபமுள்ளவர்க்குத் தமது உடம்பின் வலிமையும் வரவரக் குறைந்து போகின்றது. எவ்வாறென்றால் கோபம்வந்து தணிந்தபிறகு உடம்பில் தளர்ச்சியும் இளைப்பும் உண்டாதலை ஒவ்வொருவரும் அனுபவத்திற் கண்டு கொள்ளலாம். கோபம் என்னுந் தீயானது கொழுந்து விட்டெரியும்போது, நீர்வடிவாய் நெகிழ்ந்திருக்கும் செந்நீரெல்லாம் அதனால் உறிஞ்சப்படுகின்றது. நெருப்பின் சேர்க்கையால் தண்ணீர் சுவறிப் போதலைப் பார்த்ததில்லையா? இதுபோலவே கோபத்தின் சேர்க்கையால் உடம்பின் வலிவும் உயிரின் வலிவும் குன்றிப் போகின்றன.

இனி ஏதேனும் ஒரு காரணத்தால் தம் அகத்தே வருத்தம் நிகழப்பெற்றவர் அஃது அங்கே வேர் ஊன்றும் முன் அதனை அவ்விடத்தினின்றும் அகற்றுதற்கு முயலல் வேண்டும். மனம் மகிழ்தற்கு உரிய செய்கைகளையும் மனமகிழ்ச்சியை விளைக்கும் இனியவர் குணங்களையும் உலகத்துப் பொருள்களையும் உடனே நினைவுக்குக் கொண்டுவருதல்வேண்டும். தாமே முன்னர் நுகராதவற்றைப் பின்னர் மனத்தாற் பாவிப்பதென்றால் அது மனத்தின்கட் புலப்பட்டுத் தோன்றி நில்லாது. மேலும் அது பொய்ப் பாவனையே யாகலின் அதனால்வரும் பயனும் பொய்யாகவே ஒழியும். ஆனதுபற்றித் தாம் முன்னர் மெய்யாக நுகர்ந்த ஓர் இன்ப நுகர்ச்சியை நினைவுக்குக் கொண்டுவருதலே தாம் எய்திய வருத்தத்தை எளிதிலே போக்குதற்கு வழியாகும்.

இனி இம்மக்கள் வாழ்க்கையில் கவலையென்பது இயல்பாகவே வந்து ஒவ்வொருவரையும் வருத்தும் பொல்லாத கொடிய நோயாகும். தாம் தொடங்கிய முயற்சி நன்றாய் முடியுமோ தீதாய் முடியுமோ என்றும், தம்மவர் நோய் கொண்டு துன்புறுதலைப் பார்த்து அவர் சாவரோ பிழைப்பரோ என்றும், தமக்கு முதுமை வரும்போது தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/223&oldid=1628257" இலிருந்து மீள்விக்கப்பட்டது