பக்கம்:மறைமலையம் 3.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
191

மிகுந்த பொருளைச் சேர்த்துக் கொள்ளவில்லையே என்றும், தம் மனைவி மக்கள் முதலாயினார் நல்லொழுக்கமுடையவராய்ச் சீர்திருந்துவரோ சீர்திருந்தாரோ என்றும் இவ்வாறு இன்னும் பற்பலவகையாய் ஒவ்வொருவரும் கவலையடைந்து மனம் வேவுதலை நாம் கண்ணெதிரே காண்கின்றோம். இங்ஙனங் கவலைக்கு இடங்கொடுக்குந்தோறும் மனிதனுக்கு உள்ளக் கிளர்ச்சியும் வரவரக் குறைந்து போகின்றது, முயற்சியுங் குன்றிப் போகின்றது. இவை குறையவே மனநோய் மிகுதிப்பட்டுப்பின் எவ்வகை மருந்தினும் தீராதாய் உயிரைக் கொள்ளைகொண்டு போய் விடுகின்றது. ஆகையால் இப்பொல்லாத கவலைநோய் உள்ளத்திற்றலைக்காட்டாதவாறு செய்துகொள்ள வேண்டுவது (யோகசத்தி) ஒருமையாற்றலைப் பெறவேண்டுவோர் ஒவ்வொருவர்க்கும் முதன்மையான கடமையாம். சிறிது ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எவருங் கவலையடைய இடமேயில்லை. இருண்ட ஓர் இராக்காலத்து வானத்தை மேனிமிர்ந்து பார்மின்கள்!

ஆற்றுமணலினும் அளவிடப்படாத விண்மீன் கூட்டங்கள் காணப்படுகின்றனவல்லவோ? அவ்விண்மீன்களுள் ஒவ்வொன்றும் நாம் இருக்கும் இந்நிலவுலகத்தினும் எத்தனையோ மடங்கு பெரியனவாகும். அவ்விண்மீன் மண்டிலங்களிலிருந்து பார்ப்பவர்களுக்கு நமது நிலவுலகம் ஒருசிறு கடுகளவுகூடத் தோன்றுமோ என்பது ஐயம். இத்துணைச் சிறிதாகிய இந்நிலவுலகத்திலேயிருக்கும் எண்ணிறந்த கோடி உயிர்களில் நாமும் ஒரு சிற்றுயிர். இந்தச் சிற்றுயிரால் உலகத்தில் என்ன பெரிய காரியஞ் செய்யமுடியும்? ஒன்று நினைத்தால் முடிவது வேறொன்றாய் இருக்கின்றது; இவன் ஒன்றும் நினையாதிருக்கையில் எத்தனையோ இவனை வந்து சூழ்ந்து கொள்ளுகின்றன. நாளைக்கு இது செய்வோம் என்று எண்ணிப் படுத்தவன் மறுநாள் உயிர்பெற்று எழுந்திருப்பதே உறுதியில்லை. மனிதனுடைய அறிவால் எவ்வளவோ திறமையாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட் கட்டிடங்களும் சிறந்த நகரங்களும் ஓர் இமைப்பொழுதில் நில அதிர்ச்சியினால் நுறுங்கிக் கீழ்விழுந்து அழிந்து போகின்றன; இன்றைக்கு நிலமாயிருப்பது நாளைக்கு நீரினால் மூடப்படுகின்றது! நீர் நின்ற இடங்களில் நிலங்கள் தோன்றுகின்றன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/224&oldid=1628259" இலிருந்து மீள்விக்கப்பட்டது