பக்கம்:மறைமலையம் 3.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
201

நல்வழியிற் செலவிடாமல் இறுகப் படிக்கும் பிசுனனுடைய முகச்சுளிவையும், அதனை அருளோடு நல்வழியில் ஏராளமாய்க் கொடுக்கும் ஈகையாளன் முகத்தெளிவையும் எவரும் இனிது தெரிந்துகொள்ளக் கூடும். இப்படியே உயிர்களின் நற்குண நிகழ்ச்சிக்கு இயைந்த உறுப்புக்களின் அமைவையும், தீக்குண நிகழ்ச்சிக்குப் பொருந்தின உறுப்பின் சுளிவுகளையும் உற்றுப்பார்த்துப் பழகிவரும் பழக்க உணர்வால் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் உணரலாம். அல்லது உறுப்படையாளங்களைக் கொண்டு ஒருவர் உள்ளத்தின் உண்மைகளை நிச்சயித்துரைக்கும் உறுப்படையாள நூலைக் கொண்டும் மனிதர் இயற்கைகளைப் பெரும்பாலும் நன்கறியலாம்.

ஆகவே, உயிர் ஆற்றலினையும் உடல் ஆற்றலினையும் ஒருங்கு பெருகச் செய்யவேண்டும் என்னும் நல்விருப்பம் உடையவர்களெல்லாரும் மேற்கூறியவற்றைப் புறக்கணித்து விடாமல் நல்ல குணங்களிற் பழகுவதற்கு இடையறாது முயன்றுவரல் வேண்டும். சிலர் நற்குணங்களிற் பழகுவது அருமையாயிருத்தலின் அது செய்தற்குக் கூடவில்லை என்று போக்குக் காட்டுகின்றார்கள். தீக்குணத்திற் பழகுவதுந் துன்பம், அதனால் வருவதுந் துன்பம், அதனால் இம்மை மறுமை யிரண்டினும் அனுபவிப்பதுந் துன்பம்; இவ்வாறு எப்போதுந் துன்பத்திற்கே இடமாய் எல்லாராலும் வெறுக்கப்படுவனவாகிய தீக்குணங்களிற் பழகுவது கடுமையோ, பழகுதற்கும் நல்லனவாய்ப் பழகிய பின் இன்பத்தை அளிப்பனவாய் இம்மை மறுமை யிரண்டினும் மாறாத நலத்தை மேன்மேலும் விளைவிப்பனவாய் உள்ள நற்குணங்களிற் பழகுவது கடுமையோ என்று சிறுமகாரைக் கேட்பினும் அவர் நற்குணப்பழக்கமே எளியதும் இனியதும் எனக் கூறுவராகலின் அச்சிறுமகார்க்குள்ள அறிவுதானும் இல்லாமல் தம்மைப் பெரியவராய்க் கருதியிருப்பவர் நற்குணப் பழக்கம் கடுமையானதென்று உரைக்கும் உரை நகைத்தற்கே இடமாவதாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/234&oldid=1628275" இலிருந்து மீள்விக்கப்பட்டது