பக்கம்:மறைமலையம் 3.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
218

❖ மறைமலையம் - 3 ❖

இனிக் கை கால் முதலான உறுப்புகள் தொழில் இயற்றுங் கருவிகளேயல்லாமல், பொருள்களை அறியும் கருவிகள் அல்ல. ஆகையால், உயிரின் மன உணர்ச்சியானது கண்,செவி முதலான அறிவுப்பொறிகளில் விளங்கித் தோன்றுதல்போலத்,தொழிற்பொறிகளான கைகால் முதலானவற்றில் விளங்கித் தோன்றுதல் இல்லை.ஆகவே,கைகால் முதலான உறுப்புகளை எவ்வகையான தொழில் செய்யும்போதும் மனவுணர்வோடு கூட்டி நடத்துதலே நலமுடைத்தாம். அவை தொழில் புரியாத காலங்களிலெல்லாம் மனவுணர்வு தானாகவே அவற்றின்கண் முனையாது வேறு பிரிந்து நிற்க வல்லதாம். ஆனால், கண் செவி முதலான அறிவுப்பொறிகளிலோ மனவுணர்வு விளங்கித் தோன்றுந் தன்மைத்தாயிருத்தலின் அவை ஒரு பொருளைச் சிறிது நோக்கினாலும் ஓர் ஓசையைச் சிறிது கேட்டாலும் உடனே அவற்றின்கண் மனவுணர்வு வந்து நின்று விளங்கித் தோன்றும். ஆனதுபற்றிக் கண்ணுஞ் செவியும் புறப்பொருள் களையும் புறத்து ஓசைகளையும் எந்நேரமும் உற்றறியும்படி பழக்குதல் ஆகாது; அன்றி அங்ஙனம் பழக்கினால் அஃது எப்போதும் பருப் பொருளுணர்ச்சி மிகுந்து புறப்பொருள்களையே நாடிச் செல்லும் அல்லாமல், இந்த ஞானேந்திரியங்களை விட்டு வேறு பிரிந்து நிற்கவும், அங்ஙனம் பிரிந்து உண்முகமாய்த் திரும்பி உயிரின் நிலையும் உயிர்க்குயிராம் இறைவன் அருள் நிலையும் ஆராய்ந்துணரவும் மாட்டாதாகும்.

ஆதலால்,உற்று நோக்குதற்கும் உற்றுக்கேட்டற்கும் உரிய காலங்களிலன்றி, மற்றக் காலங்களிலெல்லாம் மனவுணர்ச்சி யானது கண்ணிலுஞ் செவியிலுங் கலந்து நிற்கும்படி விடலகாது;எந்த நேரமும் அகத்தே நின்று பொருளினியல்புகளையும் உயிரினியல்புகளையும் முதல்வனியல்புகளையும் ஆராய்ந் தறியுமாறு அதனைத் தன் நிலையில் நிறுத்திப் பழக்குதல் வேண்டும். மேலும், உற்றுப் பார்த்தற்குங் கேட்டற்கும் உரிய நேரங்களில் மட்டும் மனனுணர்வு கண்செவிகளில் நின்றால், அக்கருவிகள் வலிமையுந் துலக்கமும் அடையும்; அவ்வாறன்றி அஃது எப்பொழுதும் அவைகளில் நின்று அவற்றை இயக்குமாயின் அவை ஓய்வில்லாத இயக்கத்தாற் பழுதுபட்டுக் கெட்டுவிடும். அவை கெடவே, மனவுணர்ச்சியும் குறைவுபடும். ஆதலால், மனனுணர்வு தன்னிலையில் நிற்கும்படி பயிற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/251&oldid=1625680" இலிருந்து மீள்விக்கப்பட்டது