பக்கம்:மறைமலையம் 3.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
220

❖ மறைமலையம் - 3 ❖



5.நரம்பு இளக்கம்

இன்னும் மன அமைதியை மிகுதிப் படுத்திக்கொள்ளு தற்கு நமதுடம்பிலுள்ள நரம்புகளை எளிதாக இளக்கிக் கொள்ளும் முறையினை நாம் நன்கு தெரிந்து பழகல் வேண்டும் உடம்பிலுள்ள பல்லாயிரம் நரம்புகளும் அவ்வுடம்பிற் பொருந்திய பலவகை உறுப்புகளையும் இயக்குதற் பொருட்டாகவே அமைக்கப் பட்டிருக்கின்றன.அவை அவ்வுறுப்புகளை இயக்கும்போது மட்டும் இறுக்கமாய் நிற்கும்; அவை இறுக்கமாய் நிற்கையில் அவற்றின் வழியே உயிரின் உயிராற்றலானது செலவழிந்து கொண்டே போம்.உயிராற்றலானது உறுப்புகளை அசைத்துத் தொழில் இயற்றுங் காலங்களில் மட்டும் செலவாதல் நன்று; அஃது ஏதொரு தொழிலுஞ் செய்யாதிருக்கையிலும், அஃது அங்ஙனம் சலவுற்றுக் கழியும்படி விடுதல் நன்றாகாது.

ஒருவன் ஒரு கடிதம் எழுதும் முயற்சியில் இருக்கும்போது,அவன் செவ்வனே ஓரிடத்தில் அமர்ந்து எழுதுகோலைக் கையிற் பற்றிக்கொண்டு கண்ணுங் கருத்தும் எழுதும் எழுத்திலும் பொருளிலும் ஊன்றி நிற்க அத்தொழிலைப் புரிகின்றான்; இத்தொழிலைச் செய்து முடித்தற்குக் கருவியாவன; அவன் தனது உடம்பை நிமிர்த்தி யிருத்தலும்,எழுதுகோலைக் கையிற் பற்றியிருத்தலும், பற்றிய அதனால் கண்ணுங்கருத்தும் ஊன்றி எழுதுதலுமே யாகும்; இம்மூன்று தொழிலும் செய்தற்குக் கருவிகளான உடம்பும்,கையும், கண்ணும் மட்டுமே நரம்புகளினால் இயக்கப்பட வேண்டியிருத்தலின் இவ்வுறுப்புகளோடு தொடர்பு பட்டிருக்கும் நரம்புகளே இறுகிய நிலையில் நிற்றல் வேண்டும்.

மற்றைக் கால்,காது,மூக்கு,வாய் முதலான உறுப்புகளுக்கு அச்சமயத்தில் வேறு தொழில் இல்லாமையால் அவற்றோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/253&oldid=1625682" இலிருந்து மீள்விக்கப்பட்டது