பக்கம்:மறைமலையம் 3.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
223

இனித் தாம் நினைத்தபோது நல்ல இனிய தூக்கத்திற் செல்லும்வகை உயர்ந்த செல்வநிலையிலிருக்கும் மக்களிற் பெரும்பாலார் உணரவேமாட்டார்; அவரெல்லாம் படுக்கையிற் சென்றால் தூக்கம் வரப்பெறாமல் மெத்தைமேல் அப்புறமும் இப்புறமுமாய்ப் புரண்டுகொண்டே ‘தூக்கம் பிடிக்க வில்லையே! தூக்கம் பிடிக்கவில்லையே!’ என்று எண்ணியெண்ணி ஏக்கமுறுகின்றனர்; தூக்கம் இன்மையால் வரவர உடம்பு மெலிந்து பருவம் முதிரா முன்னே உயிர் துறக்கின்றனர். அவர்களுக்குத் தூக்கம் வராமை எதனால் என்றால், தம் உடம்பிலுள்ள நரம்புகளை இளக்கி அமைதியாயிருக்கும் முறை அவர் தெரியாமையினாலேதான். மேலும்,அவர்கள் உடம்பு வருந்த உழையாமல் இருப்பவர்களாதலால், உடம்பின் உட்கருவிகள் செவ்வனே அசையாமற் கெட்டுப்போகின்றனர்; அசையாமலிருக்கும் ஓர் இருப்புப்பொறி துருவேறிப் பழுதாய்ப் போதல்போல, அசைவில்லாத உடம்பின் உறுப்புகளும் கொழுப்படைந்து பழுதாகிவிடும்; இரத்தக் குழாய்களில் இரத்தம் செவ்வையாய் ஓடாது, தீனிப்பை உண்ட உணவைச் செரிக்கச்செய்யாது; உண்டவுணவு செரியாவிட்டால் உடம்பிற் பலதிறப்பட்ட நோய்களும் வந்து கிளைக்கும். செல்வம் உடையவர்கள் நரம்பிளக்கம் செய்யும் முறை தெரியாமையாலும், உழைப்பில்லாதிருத்தலாலும் தூக்கமின்றி வருந்து கின்றனரென்றால், அங்ஙனமே நரம்பிளக்கஞ் செய்யும்வகை இன்னதென்றறியாத ஏழை எளியவர்கள் மட்டும் படுத்தவுடன் உறங்குதல் என்னையெனின், அவ்வேழை மக்கள் தம் வயிற்றின் கொடுமையால் நாள் முழுதும் நெற்றித்தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபட்டுவருதலால், அவர்களுடம்பின் உறுப்புகள் மிகவும் அலுப்படைந்து படுத்தவுடன் அயர்ந்த தூக்கத்தை அவர்கள் பால் வருவிக்கின்றது.

அங்ஙனமாயின்,நரம்பிளக்கத்தால் மனவமைதி யோடிருந்து இனிய தூக்கத்தை வருவித்துக் கொள்ளல் வேண்டு மென்று இங்கே கூறிய தென்னை? நன்றாய் உழைப்பவர்களுக்கு நல்ல தூக்கம் தானாகவே வருதல் கண்டோமேயெனின், மிகுந்த உழைப்பினால் வரும் தூக்கம் உயிரைப் பெரியதோர் இருளிற் கொண்டுபோய் அழுத்தி விடுமாதலால்,அது விரும்பற்பால தன்று. மேன்மேலும் அறிவு விளங்கப் பெறுதலே இம் மனிதப்பிறவி யெடுத்ததற்குப் பயனாம். நனவின்கண் விளங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/256&oldid=1625685" இலிருந்து மீள்விக்கப்பட்டது