பக்கம்:மறைமலையம் 3.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
229

இனித்,தாம் இருக்கும் இல்லங்களில் உள்ள தளவாடங்களைச் செவ்வையாகவும் அழகாகவுந் தாமே ஒழுங்குசெய்து வைத்தலாலும்,தாம் கற்கும் ஏட்டுச் சுவடிகளையும் அச்சுப் புத்தகங்களையும் அடிக்கடி யெடுத்துத் தூசிபடியாமல் தட்டி ஒழுங்காக அடுக்கி வைத்தலாலும், தாம் வழிபடுங் கடவுளின் திருவுருவத்திற்குப் பூச்சாத்திச் சாந்தம் அப்பி இன்னிசை யோடும் வாழ்த்துச் செய்யுங் பாடி வழிபாடு ஆற்றுதலாலும் தமது ம் பிற்கு வேண்டுமளவான நன்முயற்சியை அறிவுடையோர் வருவித்துக் கொள்ளலாம். எத்துணைதான் கல்வியறிவில் மேம்பட்டோராயினும் தம் இல்லங்களிலுள்ள தட்டு முட்டுகளை அழகுபெற வையாமல் தாறுமாறாகக் கிடக்கவிட்டிருப்பதும், தாம் கற்கும் நூல்களைப் பாதுகாவாமல் அவையெல்லாம் புழுதிபடிந்தும் செல்லரிக்கப்பட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாயும் குப்பை கூளங்களாயும் கீழது மேலதாயும் அலங்கோலப்பட்டுங் கிடக்கப் பார்த்திருப்பதும், தமது தெய்வத்தை மெய்வணங்கிக் கைகுவித்து வாயிசைத்து வழுத்தாமல் உடம்பால் வணங்கிப் பயனென்னை? மனத்தால் நினைத்தலே அமையாதோ? வெனச் சோம்பற் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு உடல் வளையாமற் காலங் கழிப்பதும் அவர்க்குச் சிறிதும் ஆகாவாம்; இங்ஙனமெல்லாம் நடப்பது அவரது இழிபினையும் அழுக்குத் தன்மையினையும் சோம்பேறித் தனத்தினையும் ஒளிப்பின்றிக் காட்டும் அடையாளமாகும். அறிவொளியும் சுறுசுறுப்பும் அழகிய உயர்ந்த நோக்கமும் நிரம்பிய கல்வியும் ஐயனிடத்துண்மையான அன்பும் வாய்ந்த நல்லோரைக் கண்டவுடனே அவரது உடம்பின் றோற்றத்தினாலும், அவரிருக்கும் இடங்களின் புனிதத்தன்மையினாலும் அவரது அறிவின் மேன்மையையும் அவர் தம் உள்ளத்தூய்மையினையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வியல்புடையோர் விலையுயர்ந்த ஆடை அணிகலன் களைப் பகட்டாக அணிந்துகொள்வதில் விருப்பம் இலராயினும், விலைகுறைந்ததானாலும் நறுவியவான உடைகளையும் சில மணிக்கலன்களையும் தமக்கு ஏற்ற வகையாகத் திருத்தமாகவும் துப்புரவாகவும் மேற்கொண்டிருப்பர்; குளித்து முழுகி நேர்த்தியான உடம்பின் றோற்றமும் முகவெட்டும் உடைய ராயிருப்பர். இத்தகைய புனிதத்தன்மையில்லாத பிறர் செல்வத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/262&oldid=1626070" இலிருந்து மீள்விக்கப்பட்டது