பக்கம்:மறைமலையம் 3.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
231

எவ்வகையான கொடுங் குணங்களும்,அக்கொடுங் குணங்களின் பிற்றோன்றும் இளைப்புக் குணங்களும் அறியாதனவா யிருத்தலால்,அவற்றின் உடம்பிலுள்ள நரம்புகள் வெல்லப் பாகு போற் றுவளுந் தன்மை மிகுந்து காணப்படுகின்றன; அதனால், அவற்றினுடம்பு தொடுதற்குங் காண்டற்கும் இனிய குழைவுடையனவாய்த் திகழ்கின்றன. குழந்தைகள் கீழே நிலத்தில் வழுக்கி வீழ்ந்தால் மிகுதியாய்க் காயம்படாமைக்கும் அடிபடாமைக்குங் காரணம் இதுவே; நெகிழ்ந்த பிசின் உருண்டையை (India rubber ball) நிலத்தில் எறிந்தால் அஃது அதனின்றும் அதைத்து விழுதல் போலக் குழந்தைகள் கீழ்வீழ்ந்தால் அவை பெரும்பான்மையுங் காயம் அடைவதில்லை. மற்று வயதில் முதிர்ந்தவர் உடம்பு வன்குணப் பழக்கத்தால் நரம்புகள் இறுகியிருத்தலின், அழுத்தமான கண்ணாடி உருண்டை (Glass ball) கீழ்விழுந்தால் நுறுங்கி உடைந்துபோதல் போல அவையுங் கீழ் விழுந்தாற் பெரிதும் புண்படுகின்றன, பழுதுபட்டும் போகின்றன. ஆகவே, அமைதிக் குணமுடையார்க்கு அவருடம்பும் அதிலமைந்த கருவிகளும் மென்பதமுற்று நிற்குமாகலின்அவர் அதனாற் பல சிறந்த நன்மைகளைப் பெறுவர் என்பது நன்கு பெறப்படும் என்க. ஆகவே, நரம்பு இளக்கத்தால் அமைதியையும், அமைதியால் நரம்பிளக்கத்தையும் வருவித்துக் கொள்ளும் முறைகளை நன்றாய்க் கூர்ந்து பார்த்துப் பழகிக்கொள்ளுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/264&oldid=1626072" இலிருந்து மீள்விக்கப்பட்டது