பக்கம்:மறைமலையம் 3.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
236

❖ மறைமலையம் - 3 ❖

யிருக்கின்றார். அவருடைய அன்பிற்கும் அவருடைய அருளுக்கும் ஓர் அளவேயில்லை. அவருடைய அறிவும் வல்லமையும் எல்லையற்ற பெருமையுடையனவாய் இருக்கின்றன.அவர்க்கு ஒப்பானதும் அவர்க்கு மேற்பட்டதும் இல்லை. இத்தகைய முழுமுதற் பொருளின் வல்லமையில் ஒரு சிறிதாயினும் தான் அடையப்பெற்றா லல்லாமல் எவனும் வலிமையிற் சிறந்து விளங்கல் முடியாது.கடவுளின் அருளைப்பெற வேண்டுகிறவர்கள் அக்கடவுளின் செயலை ஒத்த செய்கை சிறிதாயினும் உடையராய் இருக்க வேண்டுமன்றோ? எல்லாம் வல்ல முதல்வன் பிறரது நன்மையையே கருதி எல்லாஞ் செய்தல்போல இவர்களும் பிறரது நன்மையையே கருதி உழைப்பார்களாயின் எங்குமுள்ள இறைவன் இவர்கள் உள்ளத்தில் விளங்கித் தோன்றுவான் அல்லனோ? அங்ஙனம்,எல்லாம் வல்ல பொருளின் அருள் அங்ஙனம்,எல்லாம் சிறிதாயினும் விளங்கப்பெற்றால், அதனைப் பெற்றவர் நினைவு மிக்க வலிவுடையதாய்த் தான் நினைந்ததை நினைந்தபடியே நிறைவேற்றுமென்பது திண்ணம். ஆகவே, பிறரது நன்மையைக் கருதுதல் கடவுளருளைப் பெறுவிக்குமாதலால், நினைவை வலிவேற்றுதற்கும் பிறர் நலங் கருதுதற்கும் இயைபு மிகுதியும் உண்டென்பது பெறப்படும் என்க.

இங்ஙனமெல்லாம் பிறர் நலங் கருதி நினைவை முனைக்க நிறுத்துங்கால், மேலும் மேலும் வளரும் அவாவினால் அதனை உந்துதல் வேண்டும். தான் பெறுதற்கு நினைந்த பயனைப் பிழையாது விரைந்து பெறல் வேண்டுமென்னும் அவாமுறுகி வளருந்தோறும் அதனால் உந்தப்படும் நினைவு நிறைந்த வலிவுடைத்தாய்த் தான் வேண்டிய பயனை உறுதியாகத் தந்தேவிடும். விருப்பத்தின் மிக்கது அவா; அன்பின் மிக்கது காதல். காதல் வயப்பட்டவர் நினைவின் வலிவைச் சிறிது நோக்கினாலும் இவ்வுண்மை தெளிவாய் விளங்கும். அமெரிக்கா நாட்டிலிருந்த அழகிய பெண்மகள் ஒருத்தி தற்செயலாய் அழகிய ஓர் ஆண் மகன் படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதனைப்பார்த்த அந்நேரம் முதல் அப்பெண்ணின் எண்ணமெல்லாம் அவ்வாண்மக னுருவத்திலேயே பதிந்து நின்றது. வேறெதனையேனும் வேறெந்த ஆடவரையேனும் அவள் நினைக்கமாட்டாதவளானாள். அப்படத்திலுள்ள ஆண் மகனையே தான் மணந்துகொள்ள வேண்டுமென விழைந்தாள். ஆனால், அவனிருக்கும் ஊர்,பேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/269&oldid=1626077" இலிருந்து மீள்விக்கப்பட்டது