பக்கம்:மறைமலையம் 3.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
241

போகின்றது! இடையிடையே தோன்றும் இவ்வுள்ள நிகழ்ச்சிகளே தத்தம் இயல்புகளைத் தாஞ் சார்ந்த உடம்பினும் உடம்பினுறுப்புகளினும் பதியவைக்கின்றன வென்றால், என்றும் நிலையாக நடைபெறும் உள்ள நிகழ்ச்சிகள் தம் பயனைத் தவறாமல் விளைக்கு மென்பதை நாம் சொல்லுதலும் வேண்டுமோ! ஆதலால், உள்ளத்தின்கண் தீய நிகழ்ச்சிகள் உண்டாகாமல் விலக்கித் தூய நிகழ்ச்சிகளே நிகழுமாறு கடைப்படியாகச் செய்து நினைவையும் அவ்வழியிலே வைத்து முனைக்க நிறுத்திவந்தால், இப்பழக்கம் நிலையான பயனைத் தருமென்பது திண்ணம். இன்னும், நினைவின்வன்மை வாய்ந்தவர்கள் அடுத்தடுத்து ஒரு செய்தியைச் சொல்லிவருவார் களானால், கேட்பவர் அதனைத் துவக்கத்தில் நம்பாராயினும் பின்னர் அதனை நம்பத் தலைப்படுவார்களென்பதும் அறிதல் வேண்டும்.

அடுத்தடுத்து உரைக்கும் உரை கேட்பார்க்கு நம்பிக்கையினை வருவித்துத் தன் பயனைத் தந்தே விடும் என்னும் உண்மையினை ஒருகால் நான்கு பெயர் ஒன்றுகூடித் தம் நண்பர் ஒருவரிடத்தே செய்து பார்க்கலானார்கள். ஏதொரு குற்றமும் இன்றி உடம்பும் உள்ளமும் மிகவுஞ் செவ்வையான நிலைமை யிலிருந்த அந் நண்பரிடத்தில் முதலில் ஒருவர் பார்க்க வந்தார்; வந்தவர் முதலிற் சிறிது நேரம் அவரை உற்றுப் பார்த்தார்; அதுகண்டு அந்நண்பர் 'ஏன் என்னை உற்றுப் பார்க்கிறீர்?' என்று கேட்க, வந்தவர் 'வேறொன்றுமில்லை; இத்தனை நாளாக யான் பாராத ஒரு முகவாட்டமும் உடம்பின் மெலிவும் உம்மிடத்தே காணப்படுகின்றன; அதற்குக் காரணம் யாது?' என்றார். உடனே அவர் ‘என்னிடத்தில் அப்படிப்பட்ட மாறுதல் சிறிதும் இல்லையே: யான் நன்றாகத்தானே யிருக்கின்றேன்' என்று விடை கூறினார். வந்தவர் அச்சொற்களைக் கேட்டுப் பின்னும் 'அப்படி யானால் மிகவும் நல்லதே; ஆனாலும், என் கண்களுக்கு உங்களிடத்தில் ஏதோ ஒரு வாட்டம் இருப்பது போற் றோன்றுகின்றது; ஆனாலும் உடம்பைக் கருத்தாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அவ்வளவோடு அப்பேச்சை நிறுத்திக் காண்டு, வேறுபல நல்லவற்றைப் பேசிப் போனார்.

பின்னர்ச் சிலநாட் கழித்து மற்றொருவர் இவரைப் பார்க்க வந்தார்; வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து 'யான் தங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/274&oldid=1626083" இலிருந்து மீள்விக்கப்பட்டது