பக்கம்:மறைமலையம் 3.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
244

❖ மறைமலையம் - 3 ❖

அவர் முற்றிலும் நலம் அடைதற்குரிய சொற்களைக் கூறிவர, அந்நண்பரும் முழுதும் அதனால் நோய் நீங்கப்பெற்றாராய் முன்னிருந்த நிலைமையை அடைந்தனர். இங்ஙனங் கற்றோர் நால்வர் உண்மையாக ஆராய்ந்து பார்த்த இவ்வுண்மை நிகழ்ச்சியிலிருந்து பெறப்படுவது யாது? மனவுருக்கத்தாலும் அன்பினாலும் உந்தப்படும நினைவு முனைப்போடு கூறுஞ்சொற்கள் தூயனவாயின் அவை தீய பயனைத் தருதலும் நல்லனவாயின் அவை நல்ல பயனைத் தருதலும் வழுவாமல் நடைபெறுமென்பதன்றோ! இவ்வுண்மையை நன்கு ஆராய்ந்து பார்ப்பவர்கள் நினைவு முனைப்பிற் சிறந்த கற்றவர்க்கும், நினைவு முனைப்பிலும் கருத்தொருமைப் பாட்டிலும் மன அடக்கத்திலும் உறைத்திருக்குந் தவவொழுக்கம் உடையார்க்கும் உள்ளம் வருந்தத் தக்கதேதும் செய்யார். தம்மை மனம் வருந்தச்செய்த செல்வர்கள் செல்வங் கெட்டுக் கிளைஞரோடு அழியுமாறு அறம்பாடிய புலவர்களைப் பற்றியும், தமக்குத் தீதுசெய்த அரசரும் பிறரும் தமது மேனிலை இழந்து துயர்உழக்குமாறு தமதுமேனி வசைகூறிய அருந்தவத்தோரைப் பற்றியும் நாம் கற்றுங்கேட்டும் அறிந்திருக்கின்றனம் அல்லமோ? இதுபற்றியன்றோ?

"ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணிற் றவத்தான் வரும்” (குறள்-264)

என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாரும் அருளிச் செய்தனர். அகலிகை கல்லைப்போல் மெய்ம்மறந்து கிடக்கச் சபித்துப் பின்னர் அவட்கு இரங்கி இராமபிரான்றிருவடிகள் தீண்டினவுடனே அதுநீங்கி அவள் உணர்வு பெற்று எழ அருளிய கௌதம முனிவராம் அருந்தவத்தோர் ஆற்றலை அறியாரும் உளரோ! மான்வடிவு கொண்டு தம்காதலியைப் புணர்ந்து காண்டிருந்த முனிவரரை அறியாமல் எய்த பாண்டுமன்னன் தன்மனைவியைப் புணர்ந்தால் தலை வெடித்திறக்கவென்று அம்முனிவரர் சபித்ததும், அங்ஙனமே அச்சாபம் நிறை வேறினதும் அறியாதார் எவர்! ஒருமரத்தின் கீழ்த் தவம் புரிந்த ஒரு முனிவரர்மேல் மரத்தில் இவர்ந்து மண்ணைச்சொரிந்த துரியோதன மன்னனை அவர் சினந்து பார்த்து அவன் உண்ண வெடுக்குஞ் சோறு புழுவாகக் கடவதென்று சபித்தமையும், பின்னர் அவன் தான்செய்த பிழையைப் பொறுக்கும்படி அவர் காலில் வீழ்ந்து வணங்கிக் குறையிரக்க அவரும் அவனுக்கிரங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/277&oldid=1626087" இலிருந்து மீள்விக்கப்பட்டது