பக்கம்:மறைமலையம் 3.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
246

❖ மறைமலையம் - 3 ❖

நினைவினாலே தாவுதல் வேண்டும். முதலில் அவற்றுள் ஒன்றை நன்றாக நினைவினெதிரே கொண்டுவந்தபின், அஃது ஏதேனும் ஒன்றைச் செய்யும்படி நன்றாக உறுத்து முனைப்போடு நினைத்து ஏவுக. முதலிற் சிலநாட்கள் வரையில் நினைத்தபடி ஆகாவிடினும், இம்முறையை ஊக்கங் குன்றாமல் இடைவிடாது பழகப்பழகச் சிலநாட்கழித்து நினைத்தபடி அவ்வுயிர்கள் செய்வதைக் காணலாம்.

குதிரையேறித் தனியனாய்ச் சென்ற ஒருவன் கள்வர் களாலாவது பகைவர்களாலாவது வளைத்துக் கொள்ளப்பட்ட இடரான நேரத்தில் வெள்ளம் பெருகிவரும் யாற்றையோ தாண்டுதற்கு அரிதாய்க் குறுக்கிட்ட வேலியையோ கடக்க வேண்டுமென்ற முறுகிய எண்ணத்தோடு தனது குதிரையைச் செலுத்த, மற்றைக் காலங்களில் அவற்றைக் கடக்கமாட்டாத அக்குதிரை அப்போது அவனது நினைவின் ஆற்றலால் உந்தப்பட்டுக் காற்றினுங் கடுகி அவ்வாற்றையும் வேலியையும் கடந்துபோய்த் தன்றலைவன் உயிரைத் தப்புவித்த அரிய செயல்களைக் கற்றுங் கேட்டும் அறிந்திருக்கின்றோம். தன்றலைவனது நினைவின் குறிப்பை அறிவதில் நாய் மிகச் சிறந்ததென்பதற்கு உண்மையாய் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் உண்டு. ஆகையால், தன்னோடு பழகும் சிற்றுயிர்களிடத்து ஒருவன் தனது நினைவை முனைக்க நிறுத்தக் கற்றுக் கொள்ளுதல் மிகவும் நலமுடையதாகும் என்க.

இவ்வாறு சிற்றுயிர்களிடத்துப் பழகிக்கொண்ட பின்னர், தம்போல் ஆறறிவுடைய மக்களிடத்து ஒருவர் இம்முறையைப் பயன்படுத்தத் துவங்கல் வேண்டும். முதலில், தம்மோடு உடன்வாழும் மனைவிமக்கள் உடன் பிறந்தார் உறவினர் முதலாயினாரிடத்து இதனைச் செய்து பார்த்தல் நலம். ஏனெனில், உடம்பின் தொடர்புடைய இவர் தமக்குள் இயற்கையாய் அன்பு தோன்றி, இவர்களின் உயிரையும் உயிரின் நினைவையும் ஒரு தொடர்புபட இணைத்தலால், இவர் தமக்குள் ருவர் மற்றொருவரைத் தம் நினைவின்படி செய்யுமாறு நினைவால் ஏவுதல் எளிது. ஒவ்வொன்றுக்கும் சொல்லைச் சொல்லி ஒருவரை ஏவிக் கொண்டிருப்பது ஏவுவோர்க்குப் பெருவருத்தந் தருவதோடு, கேட்போர்க்கும் நுண்ணறிவு உண்டாகாமற் செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/279&oldid=1626089" இலிருந்து மீள்விக்கப்பட்டது