பக்கம்:மறைமலையம் 3.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
247

ஆதலால்,முதன்மையானவைகளை மட்டும் சிற்சில நேரங்களிற் சொல்லால் ஏவி, மற்றவைகளைக் கண் கை கால் முதலிய உறுப்புகளின் அசைவாலும், நினைவு முனைப்பாலும் குறிப்பாலும் ஏவுதல் வேண்டும். இங்ஙனஞ் செய்தலால் ஏவுகின்றவர்க்கு வருத்தங் குறைந்து நினைவின் ஆற்றல் மிகுதிப்படுவதோடு, ஏவல் கேட்பார்க்கும் மன ஒருமையும் நுண்ணுணர்வும் மேன்மேல் வளரும். ஒரு வீட்டின் தலைவர் விடாய் கொண்டு பருகுதற்குத் தண்ணீர் வேண்டிய போது, உடனே அங்குள்ள மற்றொருவரைக் கூவியழைத்து அது காண்டு வரும்படி சொல்லுதல் ஆகாது. எவரை அது கொண்டு வருமாறு விரும்புகின்றனரோ அவரைத் தமது நினைவினெதிரே வருவித்து அதனை எடுத்துவருமாறு நினைவினாலேயே ஏவுக. முதலிற் சிலநாளிலேயே இங்ஙனம் நினைத்தபடி நடவாமைபற்றி மனந்தளரல் ஆகாது. விடாப்பிடியாய் இங்ஙனமே பழக பழகச் சிலபல நாட்களில் நினைவினாலேயே தாம் வேண்டுவன வெல்லாம் ஏவி முடிக்கலாம். அது பொருந்துமானாலும், விடாய் கொண்டு பருகுதற்கு நீர்கொண்டு வரும்படி நினைந்தவர் நினைந்தபடி அந்நேரத்தில் நடவாவிட்டால் என்செய்வ தெனின்; துவக்கத்திற் சில நொடிநேரம் நினைந்தபின்,கைதட்டிக் குறிப்பிக்க,அதனாலும் நடவாதாயின், பிற்சொற் சொல்லி ஏவுக. இவ்வாறெல்லாம் முறையாகச் செய்து பழகுவோர்க்குத் தாம் நினைந்தபடியெல்லாம் பிறரை ஏவி நடத்துவது எளிதிலே நிறைவேறும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/280&oldid=1626090" இலிருந்து மீள்விக்கப்பட்டது