பக்கம்:மறைமலையம் 3.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
250

❖ மறைமலையம் - 3 ❖

இனிப் பிறர் கண்களை உற்றுநோக்கத் தெரிந்து பழகியபின், கண்களுக்குமேற் புருவங்களுக்கு நடுவிலே அவ்வாறு நோக்கப் பழகுதல் இன்றியமையாது செயற்பாலதாம். ஏனென்றால், புருவங்களுக்கு நடுவே உட்செல்லும் இடைவெளியிலே உயிரின் அறிவு எல்லார்க்கும் முனைத்து விளங்குகின்றது. அவ்விடத்தை உற்றுநோக்குதலால் நோக்குவார் உயிரும் நோக்கப்படுவார் உயிரும் ஒன்றுபட்டு இணங்குகின்றன. இவ்விருவரில் எவருடைய உயிர் புனிதமாய் அறிவும் ஆற்றலும் மிக்கதாயிருக்கின்றதோ, அவ்வுயிர் மற்றை உயிரைத் தம் நினைவின்வழி நிறுத்தும் ஆற்றலுடையதாகும். கண்களில் உள்ளும் புருவத்திடையிலும் நினைவுமுனைப்போடு நோக்கப் பழகினவனது பார்வைக்குக் கொடிய விலங்குகளும் கொடிய மாந்தரும் மிக அஞ்சுவர். முரட்டுக் குதிரைகளையும்,புலி கரடி சிங்கம் நச்சுப்பாம்பு முதலியவைகளையும் பழக்குவோர் இந்தக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாயிருக்கிறார்கள். எவர்க்கும் அடங்காத அவற்றை அடக்கச் செல்கையில் அவர்கள் அவற்றின் கண்களிலாயினும் புருவங்களின் இடையிலாயினும் இமையாமற் பார்த்துக்கொண்டு அவற்றின் அருகிற் செல்லுதலையும்,அவை அவர்க்கு ஏதுந்தீங்கு செய்யமாட்டாமல் அவர் முன்னிலையில் அடங்கி ஒடுங்கி நிற்றலையும் கண்டறிவார்க்கு யாம் கூறும் இவ்வுண்மை நன்கு விளங்கும். வலிய விலங்குகளை அடக்கச் செல்பவன் உற்றுநோக்குதலுடன் நினைவைச் சிறிதும் சிதறவிடலாகாது. நினைவு சிதறி அச்சங்கொள்வனாயின் உடனே அவன் அவற்றிற்கு இரையாதல் திண்ணம்.ஆதலால், புருவத் திடை வெளியில் உற்று நோக்குகையில் அஞ்சாவுள்ளத்தை அந்நோக்கத்தில் முனைக்க நிறுத்தும் பழக்கம் மிகவுஞ் செவ்வையாய்ப் பழகிக்கொள்ளற் பாலதொன்றாம் என்க.

இனி,ஒருவர் தமக்கு எதிர்முகமாகவன்றிப் பின் முதுகு காட்டியிருந்தாலும் சென்றாலும்,அவரை உற்றுப் பார்த்துத் தம் நினைவின்வழி நிறுத்தல் யாங்ஙனங் கூடுமென்றால்,அவரது பிடரிக்குமேல் தலையின் அடியின் நடுவை உற்றுநோக்குதல் வேண்டுமென்று உணர்ந்துகொள்க.எதனாலெனின், புருவங் களுக்கு இடையிலிருந்து நேரே ஊடுருவிச்செல்லும் உயிர்நிலை தலையின் பின்புறத்தே பிடரிக்குச் சிறிதுமேலே சென்று முடிகின்றது.முன்னே புருவங்களின் இடையே நோக்கும் நோக்கம் நோக்கப்பட்ட உயிரைச் சென்று பற்றுதல்போலவே, பின்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/283&oldid=1626093" இலிருந்து மீள்விக்கப்பட்டது