பக்கம்:மறைமலையம் 3.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
253

இல்லை.சிறு தெய்வங்களை வணங்குவோர் சிலர் நாவில் நெடிய ஊசி ஏற்றியும், உடம்பெங்கும் கூரிய அலகுகள் ஏற்றியும் செல்வதைப் பார்த்திருக்கின்றோம்.

இஃது அத்தெய்வங்களின் உதவியால் நடக்கிறதென்று எண்ணுவாரே பலர். ஆனால், உண்மையால் ஆராய்ந்து பார்க்கு மிடத்து,அலகு தைத்துக் கொள்ளும் அவர்கள் ஒருவகையான அறிதுயிலிற் செலுத்தப்பட்டவர்களாய் அப்போதிருத்தலால் நாவிலும் உடம்பெங்கும் ஊசி கோக்கப்பெற்றும் அவற்றாற் சிறிதும் நோயுறாதவர்களா யிருக்கின்றனர். அறிதுயிலின் இயல்பு இன்னதென்றே அறியாத அவர்கள் அதிற் செலுத்தப்பட்டாரென்று கூறுதல் எவ்வா றெனின்; அவர்க்கு முதலிலிருந்தே தெய்வத்தின் வலிவால் அலகு தைத்துக் கொள்வதாகிய எண்ணம் உண்டாகின்றது. தெய்வத்தின்பொருட்டு அலகு தைத்துக் கொள்ளப் போவதால் தமக்கு அதனால் நோய் உண்டாகாதென்ற எண்ணமும் அதனோடு உடன் நிகழ்கின்றது. இவற்றோடு, அவர்க்கு அலகு தைக்கிறதற்குமுன் பூசாரி அவர் பக்கத்திலிருந்து உடுக்கு அடித்துக் கொண்டு ஒரேவகையான பாட்டை ஒரே குரலில் ஓயாமற் பாடுகின்றார். அந்நேரத்திற் பலர் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரை நீராட்டி நிறுத்தி அலகுகளையெடுத்து ஒவ்வொன்றாக அவருடம்பில் ஏற்றுகின்றனர். அப்பொழுது அவர் தம்மை மறந்து ஒருவகையான அறிதுயிலில் இருக்கின்றார் என்பதனை இவ்வாராய்ச்சியுடையோர் அவர் பக்கத்திலிருந்தார் செவ்வையாகக் கண்டு தெளியலாம்.அங்ஙனம் அவர் அறிதுயிலில் இருக்கும் நிலையினையே கற்றறிவில்லாதார் 'அவர்மேல் 'அது' ஏறியிருக்கின்றது' எனவும், 'அவர் ஆவேசம் கொண்டிருக்கின்றார்' எனவும், ‘அவர் இப்போது மருளாளியா யிருக்கின்றார்’ எனவும் கூறுகின்றனர்.

இவ்வறிதுயிலின் உண்மையை நன்கறிந்த ஆங்கிலநூற் புலவர் சிலரும் ஆங்கில மருத்துவர் சிலரும் இதனை நோய் நீக்குதற்குச் சிறந்த ஒரு கருவியாகக் கையாளுகின்றனர். பல்வலியால் மிக வருந்துகிறவர்கட்குப் பற்பிடுங்கும் மருத்துவர் முதலில் அவர் கண்களை உற்றுநோக்கும் முகத்தால் அவரை அறிதுயிலில் ருக்கவைத்துப் பிறகு அவர்க்குச் சிறிதும் நோவாமலே பயன்படாத பற்களைப் பிடுங்கிவிடுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/286&oldid=1626191" இலிருந்து மீள்விக்கப்பட்டது