பக்கம்:மறைமலையம் 3.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
255



8. தடவுதல்

னி, மேற்கூறிய முறைக்கு உதவியாகச் செய்யவேண்டும் மற்றொரு முறையினை இங்கெடுத்துக் காட்டுவாம். மேற்சொல்லிய முறைகளைப் பழகும்போதெல்லாம் கையும் இடையிடையே அவற்றிற்கு உதவியாயிருந்து தடவுதலை உன்னித்திருக்கலாம். நினைக்கும் நினைவின் வகைகளை வெளியே கட்புலனுக்குத் தெரியும்படி தெளிவாய் விளக்கிக் காட்டுங் கருவியாவது கையேயாகும். நினைவுகளைச் சொல்லினால் அறிவித்துக் காட்டும் வாயைவிட, எழுத்தினால் அறிவிக்குங் கையே சிறந்ததாக இருக்கின்றது. எங்ஙன மென்றால், வாயாற் பேசப்படும் சொற்கள் பேசியவுடனே அழிந்துபோவனவாகும்.

கையால் எழுதப்படும் எழுத்துக்களோ அங்ஙனம் அழிந்து போகாமல் நிலைபேறாய் நின்று ஒருவர் நினைவின் நிறங்களை எக்காலும் அறிவிக்க வல்லனவாய் இருக்கின்றன எவ்வளவுதான் முயன்றாலும் நினைவை ஒருவழிப்படுத்த முடியாதவர்களும் கையில் எழுதுகோலை எடுத்து எழுதத் துவங்கினால் உடனே அவர்களின் நினைவு ஒருமுகப்பட்டு நின்று கையை இயக்கி எழுத்துக்களின் வாயிலாய்த் தன்னைப் புலப்படுக்கின்றது. ஆகவே, ஒருவனது நினைவின் இயல்பைப் புலப்படுத்துதற்கட் கைக்கு உள்ள ஆற்றல் பிறிது எதற்கும் இல்லையென்பது தோன்றுகின்றது. ஓவியக்காரன் ஓவியம் வரையுமிடத்தும், கொற்றச்சன் சந்தனக்கட்டையிலோ, யானைமருப்பிலோ, சலவைக் கல்லிலோ ஓர் உருவினை இயற்கைவழாமல் செதுக்கித் திறம்பட அமைக்குமிடத்தும், இசைவல்லான் ஓர் யாழினையோ அல்லதொரு புல்லாங்குழலினையோ இயக்கிக் கல்லும் உருகப் பட்டமரமுந் தளிர்க்க இனிய இசைகளை எழுப்புமிடத்தும், ஒரு நல்லிசைப் புலவன் ஓர் அரும்பெரும் பாட்டினை அமைத்து எழுதுமிடத்தும் அவரவர் கையுங் கருத்தும் எவ்வளவு பிணைந்து எவ்வளவு ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன! என்பதை எவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/288&oldid=1624110" இலிருந்து மீள்விக்கப்பட்டது