பக்கம்:மறைமலையம் 3.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
256

❖ மறைமலையம் - 3 ❖

அறிந்துகொள்ளலாம். இங்ஙனமெல்லாம் நினைவின் ஆற்றலை வெளியே புலப்படச் செய்யும் வன்மை கையின்கண் இயல்பாக அமைந்திருத்தலைக் கண்டுகொள்க. இஃது எதனாலென்றால், நினைவுகள் பிறத்தற்கு இடமுங் கருவியுமாயிருக்கும் மூளையைக் கையோடு தொடர்பு படுத்துதற்குச் சிறந்த பல நரம்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நரம்புகளின் தொடர்ச்சியால் மூளையிற் பிறந்த நினைவுகள் தம்மை வெளியே புலனாக்குதற்குரிய அசைவுகளைக் கையிற் றோற்றுவிக்கின்றன. எனவே, ஒருவரை அவரது நன்மையின் பொருட்டு அறிதுயிலிற் போகச் செய்யவேண்டும் மற்றொருவர் தமது நினைவைக் கண்களின் வழியே செலுத்துதலோடு கையின் வழியும் செலுத்தி அவர்தம் உயிர் முனைத்து நிற்கும் இடங்களைத் தடவுவதற்கும் பழகிக்கொள்ளல் வேண்டும்.

இனி, இத்தடவுதல்தான் முதன்மையான இடங்களைத் தடவுதலும், உடம்பை முன்னும் பின்னும் நீளத் தடவுதலும், கீழ்நோக்கித் தடவுதலும், மேல்நோக்கித் தடவுதலும், என நால்வகைப்படும். இவற்றுள் முதன்மையான இடங்களைத் தடவுதலாவது உயிர் முனைத்து நிற்கும் நெற்றி தலையினுச்சி, பின்றலை, மார்பு, முதுகு முதலியவற்றை மெல்ல இனிதாய்த் தடவுதலாகும். அறிதுயிலிற் செலுத்தப்படுவோர்க்கு இவ்விடங்கள் அல்லாமல் வேறிடங்களில் நோயிருக்குமாயின் அவைகளையும் அங்ஙனமே தடவுதல் வேண்டும்; இவையெல்லாம் இடங்களைத் தடவுதல் என்ற வகுப்பில் அடங்கும்.

இனி, நீளத்தடவுதலாவது உச்சந்தலையிலிருந்து துவங்கிக் கீழ் இறங்கிக் கால் விரல்களின் முடிவுவரையில் முன்னாவது பின்னாவது தடவுதல். இஃது ஆழமான அறிதுயில் வருவிப்பதற்கும், நோய் நீக்குவதற்கும் பெரிதும் பயன்படுவது.

இனி, கீழ்நோக்கித் தடவுதலாவது அறிதுயில் வருவித்தற் பொருட்டு உள்ளங்கைகளைக் கீழ்நோக்கியபடியாய்த் தடவுவது.

இனி, மேல்நோக்கித் தடவுதலாவது உள்ளங்கைகளை மேன்முகமாய்த் திருப்பி உடம்பின் கீழிருந்து மேலேறிச் செலுத்துவது. இஃது அறிதுயிலிற் சென்றோரை அதனினின்றும் எழுப்பி இயற்கை நினைவு நிகழும் விழிப்பு நிலைக்குக் கொண்டு வருதற்பொருட்டுச் செய்யப்படுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/289&oldid=1627588" இலிருந்து மீள்விக்கப்பட்டது