பக்கம்:மறைமலையம் 3.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
258

❖ மறைமலையம் - 3 ❖

உள்ளங்கைகளை மேலே திருப்பியபடியாகவேனும் உயர்த்தாமல், பக்கச் சாய்வாய் மேல் உயர்த்தி, மறுபடியுந் தலையிலிருந்து கீழ்நோக்கித் தடவுதல்வேண்டும். தடவிக்கொண்டு கீழ் இறங்கியவுடன் விரல்களை உதறுவது எதற்காகவென்றால், விரன்முனைகளிலிருந்து பாயும் மின் ஆற்றலைத் தொடர்பறுத்துப், பெயர்த்தும் தலையிலிருந்து தடவுங்கால் அது புதிதாய்ப் பாயும்பொருட்டும், அறிதுயிலிற் செலுத்தப்படுவோர்க்குள்ள மின் ஆற்றல் தம்முடைய விரல்களில் ஓட்டா திருத்தற்பொருட்டுமே யாம். மேலும், ஒரு நோய்கொண்டோர்க்கு அந்நோய் தீர்க்கும்பொருட்டு இங்ஙனந் தடவுமிடத்தும் கீழ் இறங்கியவுடன் விரல்களை உதறிவிட்டு மறுபடியும் மேலிருந்து தடவுவதால் அவர்க்குள்ள நோய் இவர்க்கு ஒட்டாது. ஆகையால், ஒவ்வொரு முறையும் விரல்களை உதறும் முறையைத் தவறாமற்செய்து பழக்கமாக்கிக்கொள்க. ஈது அல்லாமலும், கவிழ்த்த கைகளை மேலே திருப்பி உயர்த்தினால் அறிதுயிலிற் சென்றவர் உடனே விழித்துக்கொள்வராதலால், அவைகளைப் பக்கச் சாய்வாய் அவர்தம் இரண்டு விலாப் புறங்களினோரமாய் மேலுயர்த்துதல் வேண்டும். கைகள் கவிழ்ந்தபடியாய் இருக்குங்கால் மின்ஆற்றல் விரல் நுனிகளிலிருந்து கீழ் நோக்கிப் பாயும்; அவ்வாறன்றி அவை மேன் முகமாய்த் திரும்பியிருக்குங் கால் அது மேல்நோக்கிப் பாயும். ஆதலால், அவையிரண்டும் உன்னிப்பாய்ச் செய்யவேண்டும். இவ்வாறெல்லாம் செய்து ஒருவரை அறிதுயிலிற் போக்கிப் பின் அவரை எழுப்பிவிட்டுப் போம்போதும் தம் கைகளை நல்ல தண்ணீர் கொண்டு செவ்வையாய்க் கழுவிடல்வேண்டும்.

இனி, மேற்சொல்லியவாறாய்க் கீழ்நோக்கித் தடவுதலும் மேல்நோக்கித் தடவுதலும் முறையே ஒருவர்க்கு அறிதுயிலை விளைவித்தலும், பின்னர் அதனினின்று அவரை எழுப்புதலும் யாங்ஙனம் செய்கின்றனவெனின்; அவ்வியல்பினையும் ஒரு சிறிது விளக்குவாம். எல்லாப் பிறவிகளிலும் உயிர் உடம்போடு கூடியிருக்குங்கால், அஃது அவ்வுடம்பில் இளைப்பாறத் துயில்கொள்ளும் இடமும், துயின்று இளைப்புத் தீர்ந்தபின் அறிவோடிருந்து முயற்சிசெய்யும் இடமும் என உயிர்க்கு இருவகையிடங்கள் இருக்கின்றன. கழுத்தின் கீழிருந்து குறிவரையிற் செல்லும் நாடியின் பகுதியே உயிர் துயின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/291&oldid=1627607" இலிருந்து மீள்விக்கப்பட்டது