பக்கம்:மறைமலையம் 3.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
265



10. அறிதுயிலுக்கு ஏற்றகாலம்

னி, அறிதுயில் வருவித்தற்கேற்ற பெரும்பொழுது, சிறுபொழுதுகளைப் பற்றியும் சிறிது தெரிந்துகொள்ளல் வேண்டும். கடுவெயில் காயும் வேனிற்காலத்தின் உச்சிப் பகற்பொழுது அறிதுயிலை ஒருவர்பால் வருவித்தற்கு ஏற்றகாலம் அன்று. ஏனென்றால், அப்போது புழுக்கமும் வியர்வையும் களைப்பும் எவர்க்கும் உண்டாதல் இயற்கை யாதலால், அறிதுயிலிற் செல்வோர்க்கும் அதில் அவரைச் செலுத்துவோர்க்கும் அயர்வு மிகுதியும் உண்டாம். அயர்வு வந்தபோது நினைவின் வலிமையும் உடம்பின் வலிமையும் சுருங்குவதால் அப்போது அதில் முயலுதல் ஒருகால் இருவர்க்கும் தீங்கினையும் பயக்கும். ஆதலால், அக்காலத்தில் அது செய்யற்க. ஆயினும், குளிர்ந்த சோலைகளின் இடையே வெயில் வெப்பம் தெரியாமல் சில்லென்றிருக்கும் உயர்ந்த மாளிகை வீடுகளிலானால், நண்பகற்காலத்தும் அதனைச் செய்து பார்த்தல் பழுதாகாது. மிகவும் இடரான நோய்களை விரைந்து நீக்கவேண்டி வந்தக்கால், அப்போது உச்சிப் பொழுதாயிருந்தாலும் அதனைச் செய்தல் குற்றமாகாது எனினும், அத்தகைய நேரங்களிலுங்கூட அறிதுயில் வருவிப் போர் தமக்குக் களைப்பு உண்டாகாதபடி ஒழுங்கு செய்து கொள்ளல் நன்று.

மற்று, வேனிற்காலத்தின் காலை மாலைப் பொழுதுகளும், மழைகால பனிக்காலங்களின் எல்லாப் பொழுதுகளும் அறிதுயில் வருவித்தற்கு இசைவான காலங்களென்று அறிதல் வேண்டும். மேலும், உணவெடுத்த பின்னும், பசியான நேரமும் அறிதுயிலுக்கு ஏற்ற காலங்கள் அல்ல. அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலமே அதற்குப் பொருத்தமானதென்று அறிதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/298&oldid=1624125" இலிருந்து மீள்விக்கப்பட்டது