பக்கம்:மறைமலையம் 3.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
268

❖ மறைமலையம் - 3 ❖

எனது கையோடு கூட முன்வரக்கடவீர்” என்று நாலைந்து முறை திருப்பித் திருப்பிச் சொல்லி, அறிதுயில் வருவிப்போர் நீட்டிய தமது கையை மெல்லமெல்ல முன்னே இழுத்துக் கொண்டு பின்னே செல்லச்செல்ல அறிதுயிலிற் செல்வோரும் அவர் கையோடுகூடவே வருவர். அங்ஙனம் வரலாகாதென்று அவர் எண்ணினாலும் அவரால் முடியாமல் அக்கையோடு கூடவே வரக் காணலாம். இவ்வாறு முன்நின்று அவரைத் தொடாமல் இழுப்பதுபோலவே, அவர்க்குப் பின் நின்று பின்றலைக்குநேரே கையைப்பிடித்து பின்னுக்கு இழுப்பதுஞ் செய்யலாம்.

இவ்விரண்டுஞ் செய்து பார்த்தபிறகு அவர்கையை விறைக்கச் செய்வதாகிய மற்றொன்றும் செய்துபார்த்தல் வேண்டும். அஃதெங்ஙனமென்றால்; அவரை நேரே நிறுத்தி அவரது வலதுகையைத் தூக்கி நீட்டி, அவர் தம் கண்களைச் சிறிது நேரம் உற்றுநோக்கியபின் தமது வலக்கையால் அவரது வலக்கையைத் தோளிலிருந்து முன்கைவரையிற் றடவிக் கொண்டே பின்வருமாறு சொல்லுக: ‘உமது கை இப்போது மிகவும் விறைத்துப் போகின்றது. இதனை முடக்க உம்மால் ஆகாது. இது மரம்போல் விறைத்துநிற்கும். நீ எவ்வளவு முயன்றாலும் இதனை முடக்க உம்மால் ஆகாது” என்று திருப்பித்திருப்பிச் சொல்லிப் பின் அதனை அவர் மடக்குதற்கு முயலும்படி கேட்க. அங்ஙனமே அதனை அவர்தாமாகவே மடக்குதற்கு முயன்றாலும் அது செய்ய முடியாமல் நிற்பர். அதன்பிறகு “இப்போது நீர் உமது கையை மடக்கக்கூடியவர் ஆவீர் வீர்” என்று சொல்லி அக்கையின்மேல் நோக்கித் தடவுக. இங்ஙனஞ்சொல்லியபின் அவர் தமது கை முன்போல் நீட்டவும் முடக்கவும் வல்லவர் ஆவார். இதுபோலவே, முன்னிழுக்கவும் பின்னிழுக்கவுஞ் செய்தபின் “இனி நீர் உமது விருப்பம்போல் நடப்பீர்” என்று சொல்லி மேல்நோக்கித் தடவுக. இங்ஙனஞ் செய்யா தொழியின், அவர் தமது நிலை மறந்தவராயிருத்தலுங் கூடும். இனிக் கையை மரக்கச்செய்தது போலவே காலையும் மரக்கச் செய்து பார்க்கலாம்.

இனி, மேற்சொல்லிய முறையோடு அவரது கண்ணை மூடச் செய்து பிறகு அவர்தாமே அவற்றைத் திறக்கமுடியாமல் இருக்குமாறும் செய்யலாம். எங்ஙனமென்றால், அவரை ஒரு நாற்காலியில் அமரச்செய்து அவர் கண்களைச் சிறிது நேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/301&oldid=1625789" இலிருந்து மீள்விக்கப்பட்டது