பக்கம்:மறைமலையம் 3.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
269

உற்றுநோக்கியபின், அவர் கண்களைத் தமது கையால் மூடி, அவற்றின் இரைப்பைமேல் நாலைந்து முறை தடவிப் பின்வருமாறு சொல்லுக: “இப்போது உம்முடைய கண்கள் இறுக்கமாய் மூடிக்கொள்கின்றன. இவற்றைத் திறக்க உம்மால் சிறிதும் ஏலாது. நீர் திறக்கப்பாரும், ஆனால், உம்மால் அது முடியாது. என்று சால்லியபின் அவர் அவற்றைத் திறக்கமுயன்றாலும் அது முடியாமலிருப்பர். பின்னர் “இனி நுமது விருப்பம்போல் நும்கண்களைத் திறக்கவும் மூடவும் வல்லவராவீர்” என்று சொல்லி மேல் நோக்கிக் கைகளை வீசுக. இங்ஙனஞ் செய்தவுடனே அவர் எப்போதும் உள்ள நிலையினை அடைவர். இங்ஙனம் எடுத்துக்காட்டிய இந்த நான்கு முறையாலும் அறிதுயிலில் எளிதாகச் செல்லுதற்கு ஏற்றவர்களைத் தெரிந்தெடுக்கலாம். இந்த முறைகளிற் சொன்னபடி நடக்கமாட்டாதவர்களுக்கு அதனை வருவித்தல் இடர்ப்படுமாதலால், துவக்கத்தில் அவர்பால் அறிதுயிலை வருவித்தற்கு முயலலாகாது. அறிதுயிலிற் செல்லுதற்கேற்ற தகுதியுடையவர்பால் அதனை வருவித்தற்கு நன்றாய்ப் பழகித் தேர்ந்தபின், எளிதில் அறிதுயிலிற் செல்லமாட்டாதவர்களையும் அதில் விரைவிற் செல்லுமாறு தூண்டலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/302&oldid=1625790" இலிருந்து மீள்விக்கப்பட்டது