பக்கம்:மறைமலையம் 3.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270



12. அறிதுயிலிற் செலுத்தும் முறைகள்

இனி, மேற்சொல்லிய முறைகளின்படி ஆராய்ந்து தெரிந்தெடுத்த ஒருவரை அறிதுயிலிற் செல்லுமாறு செய்தற்குரிய பலவகைப்பட்ட முறைகளையும் அடையவே எடுத்துக்காட்டி விளக்குவாம். அறிதுயிலிற் செல்வோரைத் துயில்வோர் என்றும், அதில் அவரைச் செலுத்துவோரைத் துயிற்றுவோர் என்றும் கூறுவோம். தெரிந்தெடுத்த ஒருவரை ஒரு நாற்காலியில் இருக்கச்செய்து, அவர் தமது மடிமேல் தமது இடதுகையை வைத்து அவ்விடது கைம்மேல் வலதுகையை விரித்து வைத்து அதன் உள்ளங்கையில் சிறிய ஒரு வெள்ளிக் காசை வைத்து அதனை அவர் இமைகொட்டாமல் உற்றுப்பார்க்கும்படி செய்தல் வேண்டும். இவ்வாறு அவர் ஏழெட்டு நிமிடங்கள் உற்றுநோக்கியபின், அவரது உச்சந் தலையிலிருந்து முழங்கால் வரையில் தொட்டாயினும் தொடாமலாயினும் கைகளாற் கீழ்நோக்கியபடியாய்ப் பலமுறை தடவித் துயிற்றுவோர் தமது இடது கையின் பெருவிரலால் துயில்வோரின் நெற்றியிற் புருவத்தின் நடுவிடத்தையும் தமது வலக்கையின் பெருவிரலால் அவரது வலக்கையின் பெருவிரலையும் மெல்ல அழுத்துக. இங்ஙனம் செய்கையில், அவர்தம் கண்களை மூடிக்கொள்ளும் படி கற்பித்து ஆழ்ந்து நீண்ட குரலில் “தூக்-கம், அயர்ந்-த தூக்க- ம், நல்-ல-தூக்-கம்” என்று திருப்பித் திருப்பிச்சொல்லி, நினைவை ஒருமுகப்படுத்தி அவர் தூங்கவேண்டும் என்பதில் நிறுத்துக.

இனி மற்றொருமுறை துயில்வோரை ஒரு நாற்காலியில் வசதியாக அமரச்செய்து, துயிற்றுவோர் அவரெதிரில் நின்றுகொண்டு தம் கண்களை அவர் உற்று நோக்கும்படி செய்து, தாமும் அவரது புருவத்தின் நடுவில் தமது பார்வையை நிறுத்துதல் வேண்டும். இங்ஙனம் இருவரும் ஐந்து நிமிடங்கள் உற்றுநோக்கியபின், துயிற்றுவோர் துயில்வோர் பக்கத்தில் நின்றுகொண்டு தமது இடது கையால் அவரது பின்றலையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/303&oldid=1626276" இலிருந்து மீள்விக்கப்பட்டது