பக்கம்:மறைமலையம் 3.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
272

❖ மறைமலையம் - 3 ❖

இப்பழக்கத்திற்கு மிக இசைந்த பலரை முன்னே காட்டியபடி தெரிந்தெடுத்து அவருள் ஒவ்வொருவரையும் மெல்லவேனும் சிறிது கடுகவேனும் பலபடியாய் அழுத்திப் பார்த்து, எவர்க்கு எது நல்லதாயிருக்கின்றதென்று அவரவர் வாய் மொழியைக் கேட்டே அறிந்து கொள்க. இப்படியாகத் தெரிந்துகொண்ட பின் எவரை எங்ஙனம் அழுத்துதல் வேண்டுமோ அவரை அங்ஙனம் அழுத்துக; இங்ஙனம் அவர்தம் நடுவிரல் நான்காம் விரல் நகவேர்களை அழுத்தின அளவிலே அவர்க்குத் தூக்கம் வரும்; இதிற்றூக்கம் வருவது துவக்கப்படுமானால், அவர்தங் கண்களை மூடித் “தூக்-கம், தூ-க்-கம், அயர்ந்-த-தூக்-கம், நல்-ல-தூ-க்கம், இ. னி-ய-தூ-க்-கம்” என்று ஆழ்ந்த குரலில் தொடர்பாய் ஒரே வகையாய் மெல்லத் திருப்பித் திருப்பிச் சொல்லுக இப்படிச் சொல்லிய சிறிது நேரத்திலெல்லாம் அவர் அயர்ந்து தூங்குவர்.

மற்றும் ஒருமுறை: துயில்வோரை இருக்கையில் அமரச் செய்தபின் அவரது முகத்தைச் சிறிது முன் இழுத்துக் கவிழச் செய்க. அவர் தம் கைகளைத் தம் முழங்கால்கள்மேல் வைத்துக் கொள்ளுமாறும், தம் அடிகளை ஒருங்கு சேர்த்துக் கொள்ளுமாறும் செய்க. பிறகு துயிற்றுவோர் அவர்க்கெதிரேயுள்ள இருக்கையில் இருக்கும்போது, இவர் தம்முடைய முழங்காலில் ஒன்று துயில்வோரின் முழங்கால்களுக்கு இடையிலே இருக்குமாறு அமர்தல் வேண்டும். இங்ஙனம் அமர்தல் முறையாகாத விடத்து, அவரைத் தொடாமலே சிறிது அகன்றும் இருக்கலாம். துயில்வோர் தொடத்தக்க வராயிருந்தால், அவரது நெற்றிமேல் வலதுகையை வைத்து, இடதுகையை அவரது வலது தோள்மேல் வைக்கலாம்; தொடக்கூடாதவராயிருந்தால், அங்ஙனங் கைகளை அவர்மேல் வையாமலே நேர் இருந்து, அவருடைய கண்களை ஒரு சிறிது நேரம் உற்று நோக்குக. அங்ஙனம் நோக்கியபின் இருவர் உள்ளமும் ஒருமித்தமை தெரிந்து கொண்டு, அவர்தம் கண்களை மூடிக் கொள்ளுமாறு கற்பிக்க. இவ்வாறு ஒருமைப்பாடு உண்டானவுடனே, துயிற்றுவோர் சொல்லுமாறெல்லாம் துயில்வோர் செய்யத் தலைப்படுவர். இருவர்க்கும் இவ்வொருமைப்பாடு உண்டானதை உறுதியாய்த் தெரிந்துகொள்ள வேண்டுமானால், உள்ளத்தை ஓடாமல் நன்கு நிறுத்தி, மூடிக் கொண்ட அவர்தம் கண்களைத் தொட்டேனுந் தொடாமலேனுங் கீழ் நோக்கி நாலைந்து முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/305&oldid=1625846" இலிருந்து மீள்விக்கப்பட்டது