பக்கம்:மறைமலையம் 3.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
273

தடவிப் பிறகு அவரை நோக்கி நீர் எவ்வளவு முயன்றாலும் இப்போது உம்முடைய கண்களை உம்மால் திறக்க முடியாது; திறக்க முயன்றுபாரும், உம்மால் அது முடியாது' என்று மூன்று நான்கு முறை திருப்பித் திருப்பிச் சொல்லுக அவரும் கண்களைத் திறக்க முயல்வார்; ஆனால், அவர் துயிற்றுவோர் வயப்பட்டு நின்றால் அவரால் அவற்றைத் திறத்தல் முடியாது; அவர் வயப்பட்டு நில்லாவிட்டால் உடனே கண்களைத் திறந்து விடுவார். இதுகொண்டு, அவ துயிற்றுவோருடன் ஒருமித்து நிற்பதும் நில்லாததும் திட்டமாய் உணரப்படும். மூடிய கண்களைத் திறவாமலிருக்கச் செய்தல் போலவே, தூக்கிய கையைக் கீழ்விழாமல் விறைத்து நிற்கவும், மூடிய வாயைத் திறந்து பேசாமலிருக்கவும், இருந்த இடத்தை விட்டு எழாமல் இருக்கவும், நீட்டிய காலை மடக்கமாட்டாமல் வைக்கவும், இன்னும் இவைபோல்வன பிறவுஞ் செய்து துயில்வோர் துயிற்று வோருடன் ஒருமித்து நிற்பதும் நில்லாததும் எளிதில் உணரலாம்.

இவ்வாறு இம்முறைகளுட் பலவேனும் ஒன்றேனும் செய்து பார்த்து அவர் ஒருமித்து நிற்றலை யறிந்தபின், இரண்டு கைவிரல்களையும் விரித்து நீட்டி, அவரது உச்சந்தலையிலிருந்து காற்கீழ்ப்பெருவிரல் முடியத் தொட்டேனுந் தொடாமலேனுங் கீழ் நோக்கித் தடவுக. இங்ஙனம் பத்துப் பன்னிரண்டு முறை தடவியவுடன், துயிற்றுவோர் இளைப்படைந்தால் இடையிடையே நீளத் தடவாமல், முழங்கால் இடுப்பு மார்பு கண் நெற்றி முதலான உறுப்புக்கள் வரையிலாதல் தடவலாம். இங்ஙனங் கீழ்நோக்கித் தடவும் ஒவ்வொரு முறையுங் கைகளை உதறிவிடுவதோடு, மறுபடியுங் கைகளை உயர்த்துங்கால் அவற்றைப் பக்கச் சாய்வாய்த் திருப்பித் துயில்வோரின் விலாப்புறமாக மேல் உயர்த்துதல் வேண்டும். தடவுதலை முடிக்கும்போது காலின் பெருவிரல் நுனிவரையில் நீளத் தடவி முடிக்க; அஃது எதன் பொருட்டென்றால், இடையிடையே முழங்கால் இடுப்பு மார்பு முதலான உறுப்புகள் வரையில் தடவியிருந்தால் அவ்வுறுப்பிடங்கள் வரையில் வந்து தங்கி நின்ற மின்சத்தை நீளக் காற்பெருவிரல் முடிய ஓடச்செய்தற் பொருட்டேயாமென்க.

இவ்வாறு தடவி முடித்த நேரத்தில் துயில்வோரின் தலை மெல்ல மெல்லக் கீழ்நோக்கித் தொங்கத் துவங்கும். இதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/306&oldid=1626100" இலிருந்து மீள்விக்கப்பட்டது