பக்கம்:மறைமலையம் 3.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
274

❖ மறைமலையம் - 3 ❖

தூக்கத்திற்குரிய மற்ற அடையாளங்களும் கண்டபின், அவர் யோகநித்திரை என்னும் அறிதுயிலிற் செல்கின்றார் என்பதனைத் தெரிந்துகொள்க. அதனைத் தெரிந்ததுந் துயிற்றுவோர் இன்னும் மிகுதியான நம்பிக்கையோடுங் கிளர்ச்சியோடும் அவரைத் துயிற்றுதற்குச் செல்வாராக. சென்று பின்னர் அவரது முகம் அவர்தம் முழங்காலில் வந்து கவிழ்ந்துகிடக்குமளவும் அவரைத் துயிற்றுதற்குரிய முறைகளை விடாது செய்க. அவரது தலை அவர்தம் முழங்காலில் வந்து பொருந்துமளவும் அவரைத் துயிற்றியபின், அவர் அயர்ந்த துயிலில் இருக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்க. இந்நிலையில் அவர் இன்னும் ஆழ்ந்த துயிலிற் செல்லும் பொருட்டு, அவரது பிடரியின்மேல் வாயினால் ஊதி, அவர்தம் பின்தலைமேல் துயிற்றுவோர் தமது பார்வையை நிறுத்திப் பிறகு அங்கிருந்து அவரது முதுகின் நடுவைப் பலகாற் கீழ்நோக்கித் தடவுக. அங்ஙனஞ் செய்தபின், அவர் ஆழ்ந்த துயிலில் இருக்கின்றாரா இல்லையா என்று தெரிதற்குத் துயிலினின்றும் எழுப்புவதுபோல் அவரை அப்புறமும் இப்புறமுமாக அசைத்துப் பார்க்கலாம். அவ்வாறு அசைத்தும் அவர் விழியாமல் அயர்ந்த தூக்கத்திலேயே இருப்பாராயின், அவர் ஆழ்ந்த யோகநித்திரை அல்லது அறிதுயிலில் இருக்கின்றாரென்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இங்ஙனமாக ஒருவர் ஆழ்ந்த அறிதுயிலிற் செலுத்தப் படுங்காலம் அவரது உணர்வின் சுறுசுறுப்பைப் பொறுத்திருக்கின்றது. எனினும் பெரும்பாலும் ஒரு நாழிகை நேரம் ஒருவரைத் துயிற்றுதற்குப் போதுமானதாகும். ஒருநாழிகை முயன்றும் ஒருவரைத் துயிற்றுதல் முடியாதாயின், அன்றைக்கு அதனை விடுத்து, அடுத்தநாளில் அவரைத் துயிற்றுதற்கு முயல்க. அடுத்த நாளிலும் அது முடியாதாயின் அதற்கடுத்த நாளிலும், அதிலும் இயலாவிட்டால் அதற்கடுத்த நாளினுமாகத் தொடர்ந்து முயல்க. இங்ஙனம் இரண்டு மூன்று நாட்கள் தொடர்பாக முயன்றால் எத்திறத்தவரையுந் துயிலச்செய்தல் கைகூடும். மேலும், ஒருமுறை ஒருவரை அறிதுயில் கொள்ளச் செய்துவிட்டாற், பிறகு அவரை அதன்கட் செலுத்துதல் மிக எளிது; அவர் துயில் கொள்ளல்வேண்டுமென எண்ணிய அளவானும், அவர்மேற் சிலமுறை தடவிய அளவானும் அவர் எளிதிலே ஆழ்ந்த அறிதுயிலிற் சேர்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/307&oldid=1626101" இலிருந்து மீள்விக்கப்பட்டது