பக்கம்:மறைமலையம் 3.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
276

❖ மறைமலையம் - 3 ❖

நிலத்திலாயினும் அல்லதொரு கட்டிலின் மேலாயினும் படுக்க வைத்தல் வேண்டும். அங்ஙனம் அவரை மல்லாக்கப் படுக்கவைத்த பின் ‘தூங்கும்’ ‘செவ்வையாய்த் தூங்கும்’ என்று இடையிடையே சொல்லிக்கொண்டே அவரது புருவநடுவில் மெல்லென இடது கையை வைத்து, வலதுகையால் நீளத்தடவுக. இவ்வாறு செய்த சிறிதுநேரத்தி லெல்லாம் அவர் அயர்ந்த அறிதுயிலிற் செல்வர்.

இனி ஒரேகாலத்திற் பலரைத் துயிற்றுதற்கு ஒருவர் கைக்கொள்ள வேண்டிய முறையாதெனிற் கூறுவாம். மாந்தர்களிற் பலர் பலவேறுவகையான இயல்புகள் உடையவராயிருத்தலின் அவர்களைத் துயிற்றுதற்குச் செய்யும் முறைகளும் பலவேறு வகைப்பட்டனவாய் இருக்குமென்பது உணரப்படும். என்றாலும், ஒருவர் பலவகையான முறைகளையும் அடுத்தடுத்துச் செய்து பழகிவருவராயின், அவர் அப்பழக்கத்தால் ஆற்றல் மிகப்பெற்று ஒரே ஒரு முறையாற் பலரையுந் துயிற்றவல்லுநர் ஆவர். ஆயினும், சிலநேரங்களில் அவருங்கூடப் பலரைத் துயிலச்செய்யும் பொருட்டுப் பலவேறு முறைகளைக் கையாள கையாள வேண்டி வருமாதலால், அவர் பெரும்பாலும் அம்முறைகளெல்லாவற்றையுந் தெரிந்து பழகிக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். இனிப், பலரைத் துயிற்றுதற்கு இசைந்த ஓர் அரிய முறையினை இங்கெடுத்துக் காட்டுகின்றாம்.

அறிதுயிலில் துயிற்றப்படுதற்கு இசைந்துவந்த பலரையும் ஒரு வரிசையாக இருக்கைகளின்மேற் செவ்வனே அமரச் செய்க. முன்னும் பின்னுஞ் சென்று அவர்களைத் தடவித் துயிற்றுதற்கு இசைவாக அவர்கள் எதிரிலும் பின் புறத்திலும் வேண்டுமளவுக்கு இடம் தாராளமாய் இருக்க வேண்டும். அப்பலரின் முழங்கால்களும் பக்கங்களில் ஒன்றையொன்று தொடுமாறு இருக்கவைத்தால், அவ்வெல்லாரிடத்தும் பாயும் மின்ஆற்றல் அவரிடத்தெல்லாம் ஒரே தன்மையாகப் பரவி ஒரு முழுதாய் நிற்கும். அவர்களுடைய முகங்களையெல்லாம் சிறிது முன்னே இழுத்துக் குனியச் செய்வதுடன், அவர் தம் கைகளையும் தம் முழங்கால்களின்மேல் வைத்துக் கொள்ளுமாறு செய்க. அவர்களைச் சூழ உள்ள எல்லாம் அமைதியாயிருக்க, இவையெல்லாம் செய்தானபின், அவர்கள் எல்லாருந் தமது கட்பார்வையை ஒரு முனையில் நிறுத்துமாறு கற்பிக்க. இஃது அவர்கள் தமது மூக்குமுனையை நோக்குதலால் எளிதிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/309&oldid=1626103" இலிருந்து மீள்விக்கப்பட்டது