பக்கம்:மறைமலையம் 3.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
277

செய்யப்படும். கண்விழித்திருக்கமாட்டாமல் அவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டு தூங்க மனம் வந்தால் அதனைத் தடைசெய்யாமல் அவ்வாறே செய்யும்படி கூறுக. அதன்பின் அவர் ஒவ்வொருவரையும் எதிரே முடிமுதற் றுவங்கி முழங்கால் வரையும் நாலைந்து முறை இரண்டு கைகளாலுங் கீழ்நோக்கித் தடவுக. பிறகு அவர்க்குப் பின்புறத்தே போய் அவர் ஒவ்வொருவரின் பின்றலையடியிலிருந்து முதுகு நெடுக அங்ஙனமே தடவுக அவற்றோடு, இரண்டொரு முறை அவர் ஒவ்வொருவரின் புருவநடுவில் வலது கையை வைத்துச் சிறிது மெல்லெனத் தடவுக. இங்ஙனஞ் செய்கையில், அவர்களின் தலைகளில் ஆட்டங் காண்கின்றதா என உற்று நோக்குக. அவர்களில் எவர்க்கேனும் ஆட்டங்கண்டால், துயிற்றுவோர் தம் கைவிரல்களை அவர் தலையுச்சியின் மேல் வைத்துத் தமது பெருவிரலாற் கீழ்நோக்கி அழுத்திக்கொண்டே, அவர் தம் கண்களை மூடிக்கொள்ளுமாறு கற்பித்துத் ‘தூங்கும்’ என்று சொல்லி, அவரது தலையை நிமிர்த்தி அஃது அவர் நாற்காலியின் முதுகுமேற் சாய்ந்திருக்குமாறு வைக்க. பிறகு அவர்தம் முடிமேல் வைத்த விரல்களால் மெல்லமெல்லக் கீழ்நோக்கி நெற்றி, கண்கள் முகம்முடியத் தடவுக.

இங்ஙனம் எல்லாம் செய்யவே அவர்களில் உணர்வு நுட்பம் இயற்கையிலே வாய்ந்தவர்கள் தூக்கமயக்கம் உடையவர்களாய்க் காணப்படுவர்; அவர்களை மட்டும் மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்து பார்த்தற்குத் தக்கவர்களாக இருத்திக் கொள்க; அத்தூக்க மயக்கம் இல்லாதவர்களை அவ்வரிசையினின்றும் அகற்றிவிடுக. பின்னர் அறிதுயிலுக்கு ஏற்றவராக இருத்தப்பட்டவர்கட்கு மேலும் மேலும் தூக்கம் உண்டாகும்படி இப்போது முயலத் தொடங்குக. இப்போது தீர்மானத்தோடும் விரைவாய் அவர்களின்மேல் தடவுதலைச் செய்து, அவர்கள் ஒவ்வொருவராய் ஆழ்ந்த துயிலிற் செல்லுமாறு கற்பிக்க. அவர்கள் ஆழ்ந்த அறிதுயிலிற் சென்ற அளவானே, அவர்களின் உடம்பு துவண்டிருக்கும், அவர்கள் ஒரே ஒத்தநிலையிலிருத்தல் இயலாது, தம்மைச்சூழ நடப்பது இன்னதென்றும் அறியார். இவ்வடையாளங்களைக் கொண்டும், அயர்ந்த துயிலுக்குரிய மற்றக் குறிகளைக் கொண்டும் அவர்களது துயிலின் நிலைமை நன்குணரப்படும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/310&oldid=1626105" இலிருந்து மீள்விக்கப்பட்டது