பக்கம்:மறைமலையம் 3.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
278

❖ மறைமலையம் - 3 ❖


இனி, நாடக அரங்கிற் கண்காட்சி காணவரும் பலருட் சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களையெல்லாம் சொல்லோடும் இன்முகத்தோடும் நாடக அரங்கின்மேல் வருவித்து வைத்து, அவர்களை அறிதுயிலிற் போகச்செய்து, அவர்கள் பாற் பலவியப்பான காட்சிகளையெல்லாங் காட்டலாம். ஆனால், நாடக அரங்கில் இவ்வறிதுயிலைப் பலர்பால் வருவித்துப் பல வியப்பான நிகழ்ச்சிகளைக் காட்டுதல் எளிதன்று. “அறையில் ஆடி அம்பலத்தில் ஆடு’ என்னும் பழமொழிக்கு இணங்க, முதலில் வீட்டின்கண்ணே இக்கல்விமுறையைச் செவ்வனே பழகித் தேர்ச்சிபெற்றபின் நாடக அரங்கில் இதனைக் காட்டுதற்கு வெளிவரல் வேண்டும். நாடக அரங்கில் வந்தேறுதற்கு இசைந்த ஆற்றல்பெற்று அதன்கண் வந்தவர் முதலில் ‘யோகநித்திரை’ என்னும் இதன் மேன்மையையும் இதனால் விளையும் பயன்களையுங் கேட்போர் உள்ளத்தில் நன்றாய்த் தைக்கும்படி சிறிது நேரம் எடுத்துப்பேசுக.

அங்ஙனம் பேசி முடித்தபின், எதிரே அவைக்களத்திலிருப்போர்க்குத் தாம் செய்து காட்டப்போகும் முறைகளிற் சிலவற்றைச் சொல்லிக்காட்டி, அவற்றிற்கு அவர்களும் உதவியாய் நிற்கவேண்டுமென்பதனை வற்புறுத்துக. பின்னர் அவையில் உள்ளாரில் எவரெவர் அறிதுயிலிற் செல்ல விருப்பம் உள்ளாரோ அவரெல்லாம் நாடக மேடைமேல் வருகவென்று அன்பாகக் கேட்டுக்கொள்ளல் வேண்டும். அதற்கிசைந்த பலர் நாடக மேடைமேல் வருவர். நாடக அரங்கின் ஒருபுறத்தே இன்னிசைக் கருவிகளுடன் இனிய இசைப்பாட்டுகள் சிலர் பாடிக் கொண்டிருத்தல் வேண்டும். மேடைமேல் வந்தோரை யெல்லாம் அரைவட்டமாக இட்ட நாற்காலி வரிசைமேல் அவையிலுள்ளார்க்கு எதிர்முகமாக இருக்கும்படி அமரச்செய்க. இனி, எதிர்முகமாக வன்றி, மேடையின் இருபக்கங்களிலும் இருக்குமாறும் செய்யலாம். அவர்களை அவ்வாறு இருத்தியபின், ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்துத், துயிற்றுதற்குத் தகுதியில்லாதவரென்று காணப்படுவோரை யெல்லாம் பணிவோடும் இனிதாகச் சொல்லித் திரும்பவும் கீழே அனுப்பிவிடுக. மேடைமேல் வந்ததும் நாற்காலிகளின்மேல் இருத்தப்பட்டோரில் எவர் தமது ஒரு கால்மேல் மற்றொரு காலைத் தூக்கிவைத்துக் கொண்டு நிமிர்ந்தபடியாய்ப் பின்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/311&oldid=1626107" இலிருந்து மீள்விக்கப்பட்டது