பக்கம்:மறைமலையம் 3.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
279

சாய்ந்து இருக்கின்றனரோ அவர் இறுமாப்பு உடையவரெனத் தெரிந்து, அவர் அறிதுயிலுக்குத் தகுதியில்லாதவராதலால் அவரை உடனே கீழே போகச்செய்க. அங்ஙனமே, புகையிலை தின்போரையும், புகைச்சுருட்டுப் பிடிப்போரையும், மூக்குப் பொடியிடுவோரையும், சாராய நாற்றம் உடையோரையும் இதற்குத் தகுதியில்லாதவரென உணர்ந்து அவரையும் அகற்றிக் கீழே போகச்செய்க. துயிற்றுவோர் இதற்குமுன் அறிதுயிலிற் பலகாற் செல்லும்படி பழக்கப்படுத்திய சிலரையும் தம்மோடு உடன்கொண்டுவந்து முற்கூறிய புதியோர் பக்கத்தில் இருக்கும்படி செய்தலும் நன்று.

அதன் பிறகு, துயிற்றுவோர் தாம் சொல்லுகிறபடியெல்லாம் அவர்கள் உண்மையுடன் நடந்துகொள்ளும்படி கற்பிக்க. அவர்களை நோக்கிச் சொல்லுவன இயற்கையான குரலில் தீர்மானத்தோடும் எல்லாம் தெளிவாகச் சொல்லப்படுதல் வேண்டும். அதன்பின் ஒவ்வொருவரும் மடிமேல் வைத்த தமது இடது உள்ளங்கையின்மேல் தமது வலதுகையை மேல்நோக்கி விரித்துவைத்துக்கொள்ளும்படி செய்க. பின்னர்ச் சிறிய வெள்ளிக்காசுகளையேனும், அல்லது அவற்றைப்போல பளிச்சென்றிருக்கும் வேறுசிறு பொருள்களையேனும் வருவித்து அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் கையினும் இட்டு, அவரெல்லாரும் தம் கையிலுள்ள அச்சிறுபொருளை இமை கொட்டாமற் குனிந்தபடியாய் உற்றுநோக்கும்படி சொல்லுக. அவர் எல்லாரும் அங்ஙனம் உற்றுநோக்கிக்கொண்டிருக்கையில், துயிற்றுவோர் முன்னமே இதில் பழக்கித் தம்முடன் கொண்டு வந்தோரில் ஒருவரையும் அங்ஙனமே உற்றுநோக்கும்படி செய்து அவரைத் துயிற்றுதற்குப் புகுக.

இதில் முன்னரே பழக்கப்படுத்தப்பட்டவர்க்கு இந்த முறையில் அன்றி, வெறுஞ்சொல்லளவிலே துயிலை எளிதில் வருவிக்கலாமென்றாலும், மற்ற எல்லார்க்குஞ் செய்வதுபோற் செய்தலாற், புதியராய் வந்து அமர்ந்தோர் அதனைக் கண்டு துயிற்றுவோர்வழியில் எளிதில் அடங்கி நின்று துயில்வர். பழையவரை நோக்கித் ‘தூங்கும்’ என்று சிலமுறை திருப்பித் திருப்பிச் சொன்னவுடன் அவர் நன்றாய்த் தூங்குவர். அவரைத் துயிற்றியபின்பு, மற்றைப் புதியோரிடஞ் சென்று அவருட் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/312&oldid=1626109" இலிருந்து மீள்விக்கப்பட்டது