பக்கம்:மறைமலையம் 3.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
281

தூக்கத்தை வருவித்தலின்கண்ணும், அதனை வருவித்த பின்னர்ச் செய்ய வேண்டுவனவற்றிலும் முனைத்து ஒருமுகமாய்க் குவிந்து நிற்குமாறு செய்தல் இன்றியமையாததாகும் ஏனென்றால், எத்தகைய அரியசெயலும் நினைவை ஒருமுகமாய் நிறுத்தி வலிவேற்றுதலினாலேயே முடிக்கப்படுகின்றது துயிற்றுவோர் இடையிடையே இளைப்படைந்தாற் சிறிது துங்கி நின்று தூயகாற்றைப் பலமுறை மூக்கால் உள்ளிழுத்தலானும், பாலேனும் பானகமேனும் பருகுதலானும் அவ் விளைப்பைத் தீர்த்துக்கொள்ளலாம். இளைப்புத் தீர்த்துக் காண்டபின் திரும்பவும் அவர்கள் பாற்சென்று, அவர்களில் உறங்குவோர்க்குப் பின்னும் அவ்வுறக்கத்தை மிகுதிப்படுத்தல் வேண்டி மேற்சொல்லிய முறையாகவே பின்னுஞ் சிறிதுநேரம் முயல்க.

இப்போது அவர்களெல்லாரும் நன்றாய் அயர்ந்துறங்கத் தலைப்படுவர். அவர்கள் உறக்கத்திற்குச் செல்கையிலேயே துயிற்றுவோர் பின்வருமாறு, ‘நீங்கள் என் - சொற்களையல்லாமல் - வேறு எதனையும் - கேட்க மாட்டீர்கள். நீங்கள் - யான் அயர்ந்த உறக்கத்தில் - இருந்தாலும் - யான் - சொல்லுவனவற்றைக் - கேட்டு அவற்றின்படியெல்லாம் - செய்வீர்கள். யான் - உங்களை - எழுப்புகின்ற வரையில் - நீங்கள் நன்றாய் உறங்குவீர்கள். யான் - திரும்ப - உங்களை - எழுப்புகின்ற போது - நீங்கள் - நன்றாய் உறக்கம் நீங்கி - எழுந்து விடுவீர்கள்’ என்று அழுத்தமானகுரலில் மெல்ல மெல்லச் சொல்லுக. இவ்வாறு சொல்லித் துயிற்றிய அளவிலே, துயிற்றுவோர் சொல்லுகிறபடியெல்லாம் செய்தற்கு இசைந்த அறிதுயிலில் அவரெல்லாம் செல்லாநிற்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/314&oldid=1626112" இலிருந்து மீள்விக்கப்பட்டது