பக்கம்:மறைமலையம் 3.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282



13. மூவகைத்துயில்

இனி, ஒருவர்க்கோ அல்லது பலர்க்கோ இங்ஙனம் வருவிக்கப்படும் அறிதுயிலானது மூவகைப்பட்ட நிலைகளை உடையதாகின்றது. அவை: நினைவுத்துயிலும், நினைவற்ற துயிலும், நடைத்துயிலும் என மூன்று வகைப்படும். அவற்றுள் நினைவுத் துயிலில் இருப்போர்க்கு நினைவுமாறாது; அத்தூக்கத்தில் நடப்பனவெல்லாம் அது நீங்கியபின் நினைவுக்குவரும். இந்நிலையில் இருப்போர்க்குக் கண்கள் திறந்தனாயினும் மூடியாயினும் அரைவாசி திறந்தாயினும் இருக்கும். இவர்களைத் தாம் ஏவியபடியெல்லாம் நடக்குமாறுசெய்தல் துயிற்றுவோர்க்கு முடியாது; என்றாலும் இவர்களுடைய முகம் கைகால் முதலான உறுப்புகளைத் தாம் விரும்பிய நிலைகளிற் சிறிதுநேரம் நிற்குமாறு துயிற்றுவோர் செய்துவைக்கலாம். இத்துயிலில் இருக்கையில் உடம்பில் நோய் உணர்ச்சி இராது, ஊசியாற் குத்தினாலும், கத்தியாற் சிறுக அறுத்தாலும் நோய்தோன்றாது. இதனைக் கண்டறிந்த நுண்ணறிவு மிக்க வெள்ளைக்கார மருத்துவர் சிலர் புண்கள் கழலைகளாற் பொறுத்தற்கரிய துன்பத்தையடையும் நோயாளிகளை அந்நோய் தெரியாமல் அவற்றை அறுத்துத் தீர்க்கும் பொருட்டு இத்துயிலிற் போகச் செய்து, அவற்றை அவர்க்கு நோய் தெரியாமலே அறுத்துத் தீர்க்கின்றனர். முருகக்கடவுளுக்கு நேர்ந்துகொண்டு உடம்பில் அலகேற்றிக் காவடி எடுத்துச்செல்வோர் இத்தகையதொரு நினைவுத் துயிலின் கண்ணேதான் இருக்கின்றனர். இத்துயிலின் பயனை உண்மையாய் உணர்பவர்கள் இதனாற் பலநலங்களை யடையலாம். இரவும் பகலும் உறக்கம் இன்றி நோயால் துன்புறுவார்களை இத் தூக்கத்திற் போகச் செய்தால் அவர்கள் தமக்குள்ள நோயின் துன்பத்தை அறியாராய் இனிது உறங்குதலோடு உறக்கம்நீக்கி எழுந்தபின்னும் அந்நோயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/315&oldid=1626114" இலிருந்து மீள்விக்கப்பட்டது