பக்கம்:மறைமலையம் 3.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
285

தொடாமலே தடவுவாரானார். இவ்வாறு அரைமணி நேரம் வரையிற் செய்தபின், அவனோடுபேசிப் பார்த்ததில் அவன் எப்போதும் போலவே அறிவோடு பொருத்தமாய்ப் பேசினான். அதன்மேல் அவனைத் திரும்பவும் அமைதியாய் இருக்கக் கற்பித்து, இன்னும் கால்மணி நேரம்வரையில் முன்தடவிய படியாகவே தடவிப் பார்த்தார்; பின்னும் அவன் முன்னிருந்தபடியே இருந்தமையால் அவர் அது பலிக்கவில்லையென்று விட்டுவிட்டுத் தாம் இதில் மிகவுங் களைத்துப் போனமையால் ஓர் இருக்கையில் அமர்ந்து இளைப்பாறுவாரானார். அப்பொழுது அந்நோயாளியோ அசைவற்று அமைதியோ டிருந்தான்; துன்பத்தின் அடையாளங்களான முகச்சுளிவுகள் இப்போது அவனிடம் காணப்படவில்லை; கண்ணைத் திறக்கும் படி கற்பிக்கப்பட்டபோது அவன் ‘எங்கும் புகைசூழ்ந்தாற்போல் இருக்கின்றது’ என்றான்.

அச்சொற்களைக் கேட்டதும், அவ்வெள்ளைக்கார மருத்துவர் பின்னும் அவனை முயன்று பார்க்குங் கருத்துடையவராய், அவனது தலைமேல் வாயினால் ஊதி, அவனது பின்றலையிலிருந்து முகத்தின் மேலாகக் கையினால் தடவிக்கொடு மேல்வயிறு வரையில் வந்து அதனை அழுத்தினார். இங்ஙனம் அவர் செய்தவுடனே அவன் தன் அரையில் அழுத்திக் கொண்டிருந்த கைகளை அப்புறம் எடுத்து, அம்மருத்துவர் கைகளைப் பிடித்து அழுத்தி ‘நீங்களே என் தாயும் தந்தையும், எனக்கு நீங்கள் திரும்பவும் உயிரைக் கொடுத்தீர்கள்.’ என்று சொல்லிப் பெருமூச்செறிந்தான். அதனைக் கண்டு அம்மருத்துவர் பின்னும் மனவெழுச்சி உடையவராய், அறிதுயிலிற் செலுத்தும் முறைகளை மேற்கூறியவாறே பின்னும் விடாமற் செய்வாராயினர். பிறகு ஒருமணி நேரத்திலெல்லாம், தான் தூங்கவேண்டுமென்றும் தன் உணர்வுகள் கலைந்து போயினவென்றும் சொல்லி வாயைத் திறந்து கொண்டு தூங்கலானான். அவன் தொடர்பாக விடை சொல்ல இயலவில்லை. கண்களைத் திறக்கும்படி கற்பிக்கப்பட்டபோது திறந்து, எங்கும் புகையாய் இருக்கிறதென்றும், எவரையும் தெரிந்துகொள்ளக் கூடவில்லையென்றும் கூறினான்; அவன் கண்கள் அப்போது ஒளியின்றி இருந்தன; அவன் கண்ணிறைப்பைகள் மிகவும் வருத்தத்தோடு திறந்தன. துன்பத்தின் அடையாளங்கள் அவனைவிட்டு இப்போது முழுதும் அகன்றன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/318&oldid=1626550" இலிருந்து மீள்விக்கப்பட்டது