பக்கம்:மறைமலையம் 3.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
289

கண்ணெதிரே கண்டு தெளியப் பெற்றார்கள். இதனைப் போலவே நிகழ்ந்த இன்னும்பல உண்மை நிகழ்ச்சிகளெல்லாம் நினைவற்ற அறிதுயிலிற் சென்றோர்க்கு உண்டாம். அளவிறந்த நலங்களை ஐயந்திரிபுக் கிடனின்றி நன்கெடுத்துக் காட்டுகின்றன.

இனி, மேற்காட்டிய நினைவற்ற துயிலினும் ஆழ்ந்து செல்லும் மூன்றாவதான நடைத்துயிலினைப் பற்றிச் சிறிது ஆராய்ந்து பார்ப்பாம். நினைவற்ற துயிலினும் ஆழ்ந்து செல்வதாகிய துயிலில் உயிரின் அறிவைக் கவிந்துநின்ற அறியாமையிருள் விலகிப்போக அவ்வுயிர்க்கு இயற்கை அறிவுவிளக்கம் மிகுந்து தோன்றா நிற்கின்றது. இவ்வாறு தோன்றும் இயற்கை அறிவுக்குக் கண் காது முதலான புறக்கருவிகளின் உதவி சிறிதும் வேண்டப்படுவதில்லை. கண் முதலிய அப்புறக் கருவிகளின் வாயிலாக ஒருவர்க்கு அறிவு நிகழும்போது, அவற்றின் எதிரே நிற்குங் கட்டிடங்கள் காடுகள் முதலிய மறைப்புகளால் அவ்அறிவு தடைப்பட்டுநின்று அவற்றிற்கு அப்பால்உள்ள பொருள்களை அறியமாட்டாதாகும். ஆனால், இவ்இயற்கையறிவு விளக்கத்தையோ புறத்தேயுள்ள எவ்வகைப்பொருளும் சிறிதும் மறைக்கவல்லன அல்ல. இஃது ஆயிரங்காதவழிக்கு அப்பால் உள்ள பொருள்களையும் அங்கே நிகழும் நிகழ்ச்சிகளையும் எளிதிலே அறியவல்லதாகும். நினைவோடிருக்கையிற் செய்யமாட்டாமல் முழுதும் விடப்பட்டவைகளையும், அரைகுறையாய் விடப்பட்டவைகளையும் நினைவிழந்த இவ்வறிதுயிலிற் றோன்றி விளங்கும் அறிவு எளிதிலே திறம்படச்செய்து முடித்திருக்கின்றது. இத்துயிலில் இருப்பவர்கட்குக் கண்கள் மூடியிருந்தும் கண்ணாற்கண்டு நடப்பவர்களினுந் திறமையாக அவர்கள் நடந்து செல்கின்றனர். தாண்ட இயலாத பள்ளங்களையெல்லாம் தாண்டிவிடுகின்றனர், ஏறமுடியாத சுவர்கள் கோபுரங்கள் முதலியவற்றிலெல்லாம் உடம்பிற் சிறிதுங் காயம்படாமல் ஏறியிறங்கி விடுகின்றனர். வியப்பான இந்நடைத்துயிலின் இத்தகைய அருஞ்செயல்களுக்கு உண்மையாக நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம்.

இத்தாலியா நாட்டிற் பெயர் பெற்ற இசைப்பாணர் ஒருவர் (Tartini) தூங்கிக்கொண்டிருக்கையிற் ‘பேய் நிலைப்பாட்டு’ என்னுஞ் சிறந்ததொரு பதிகத்தை இயற்றினார். செல்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/322&oldid=1626554" இலிருந்து மீள்விக்கப்பட்டது