பக்கம்:மறைமலையம் 3.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
290

❖ மறைமலையம் - 3 ❖

வாழ்க்கையிற் சிறந்த ஒருவர் (Lord Thurlow) தமது இளந்தைப் பருவத்திற் கல்லூரியிற் கலைபயின்று கொண்டிருந்தபோது ஒருநாள்மாலைக் காலத்தில் இலத்தீன் மொழியிற் பதிகம் ஒன்று இயற்றப்புகுந்து அதனை முடித்தற்கு எவ்வளவோ முயன்றும் முடிக்கமாட்டாமல், அன்றிரவு உறக்கத்திற்குச் சென்றார். உறக்கத்திற் சென்றதும், முடியாதுவிட்ட அப்பதிகத்தைத் திறம்பட முடித்து, விழித்தெழுந்தபின் அதனை நினைவு கூர்ந்தெழுதி வைத்தனர். அப்பதிகத்தைப் பிறகு கண்ட அறிவுடையோரெல்லாம் அதன் சொற்சுவை பொருட்டு சுவைகளையும் அழகிய அமைப்பையும் மிகவியந்து பாராட்டினர். மேலும், இன்னிசைக் கல்வியில் தேர்ச்சிபெறும் பொருட்டுப் பயின்ற மாணாக்கர் பலரில் ஒருவர் இரவிலே தூங்கிக் காண்டிருக்கையில் இடையில் அத்தூக்க மயக்கத்துடனே எழுந்து இசைப்பெட்டி (Piano) யண்டை சென்று அதனைச் செவ்வையாய் இயக்கி அதிற் பாடுதற்குக் குறித்துவைக்கப்பட்ட பாட்டைப் பிழைபடாமல் இனிதாய்ப் பாடுவது வழக்கம்.

தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவன்பாற் காணப்பட்ட இந்நுண்ணறிவு விளக்கத்தைப் பார்த்து வியந்த அவன்றன் உடன்மாணாக்கர் சிலர் ஒருநாளிரவு அவ்விசைப் பெட்டிமேற் குறித்துவைக்கப்பட்ட பாட்டைக் கீழதுமேலதாய்ப் புரட்டி வைத்துக்கொண்டு அவன் யாதுசெய்யப் போகின்றான் என்று விழித்துப் பார்த்தபடியாய் இருந்தனர். ஆனால், தூக்கத்தின் இடையே நடக்கும் அம்மாணாக்கனோ வழக்கம்போல் இசைப்பெட்டியினிடம் சென்றவுடன், இசைப்பாட்டுக் கடிதம் புரட்டிவைக்கப்பட்டிருத்தலை எப்படியோதெரிந்து, அதனை யெடுத்து, வைக்கவேண்டிய முறைப்படி வைத்துக்கொண்டு பெட்டியை இயக்கிச் செவ்வையாய்ப் பாடினான். இன்னும், ஓர் இளைய பெண்பிள்ளை நள்ளிரவில் தூக்கத்தின் நடுவே எழுந்து, முழு இருளில் மூடியகண் மூடியபடியாய் இருக்க, அழகாகவும் அறிவாகவுங் கடிதங்கள் எழுதி வைப்பாள். இவ்விடத்தில் வியக்கத்தக்கது மற்றொன்று உண்டு. நள்ளிரவின் இருளில் கண்மூடியவாறே அவள் எழுதிக்கொண்டு போகையில் ஏதேனும் சிறிது வெளிச்சம் அவளிருக்கும் அறைக்குள் நுழைந்தாலும் அவள் உடனே எழுத முடியாமல் நின்றுவிடுவாள். முழு இருளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/323&oldid=1626555" இலிருந்து மீள்விக்கப்பட்டது