பக்கம்:மறைமலையம் 3.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
292

❖ மறைமலையம் - 3 ❖

கொண்டு நின்றாள். கடைசியாக, ஓர் ஏணியைக் கொணர்ந்து சார்த்தி அவ்வீட்டுக்குரியவர்களில் ஓர் இளைஞன் அக்கூரையின் ஒரு பக்கமாய் ஏறி அதன்மேற் செல்ல, அங்கெல்லாம் பனிக்கட்டி மிகுதியாய் மூடியிருந்தமையின் அவன் அப்பெண்ணண்டை போகக்கூடாதவனானான்.

அதனால் அவன் கீழிறங்கி வந்து, ஏணியை அவ்வீட்டின் முகப்பிற் கொண்டு போய்ச் சார்த்த, இப்போது அச்சேவகர் அதன்மேல் ஏறி அப்பெண்ணண்டை யிற் போக, அவர் கிட்டவரும் வரையில் சும்மா இருந்த அப்பெண் அவர் தன்பால் அணுகக் கண்டதும் மறுபடியும் அப்பக்கத் தாழ்வாரத்து உச்சியின்மேலும், அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாய் அவ்வீட்டுக் கூரையின் மேலும் ஓடி, அங்கிருந்து திரும்பவுங் கொடி முந்திரிப்பந்தரின்மேல் தாவி ஏறிப், பிறகு அவ்வாண்மக்கள் தன்கிட்ட வருதற்குமுன் நிலத்தே குதித்து அத்தோட்டத்தின் பின் வாயில்வழியே நுழைந்து வெளியே புறப்பட்டு ஒரு பெருந் தெருவின் வழியே ஓடலானாள். உடனே அவர்களெல்லாரும் அவள் பின்னே மிக விரைந்தோடி ஓரிடத்தே அவளைப் பிடித்தார்கள். பிடித்த பின் அவளை இன்னாளென்று தெரிந்து அவளுறவினரை வருவித்து அவர்களிடம் அவளை ஒப்புவித்தனர். அப்பெண் தூக்கத்தில் இங்ஙனம் வெளிநடந்து திரிந்தது இரண்டாம் முறையாகுமென்று அவளுறவினர் தெரிவித்தனர். இவ்வாறெல்லாம் உயரமான இடங்களில் ஏறித் திரிந்தும் அவளுடம்பில் ஒருசிறு காயங்கூட இல்லாமையைக் கண்டு எல்லாரும் நிரம்ப வியப்படைந்தனர்.

இனி, இந்நடைத்துயிலின்கண் ஒருவர்க்கு விளங்கும் அறிவானது நெடுந்தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகளையும் ஏதொரு கருவியின் உதவியையும் வேண்டாது எளிதில் அறியவல்லதா யிருக்கின்றதென்பதற்கு உண்மையாய் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியினை இங்கெடுத்துக்காட்டுகின்றாம். 1995ஆம் ஆண்டில், பம்பாய் நகரத்திற்கு இரண்டுகல் தொலைவில் உள்ள கொலாபா என்னும் இடத்தில் ஓர் ஆங்கிலப்படைத் தலைவரும் அவர்தம் மனைவியாரும் தங்கியிருந்தனர். அவ்வம்மையார் யோகநித்திரையைப் பற்றிய பல நூல்களைக் கற்றுவந்தமையிலிருந்து, அம் முறையை ஆராய்ந்து பார்ப்பதில் அளவிறந்த வேட்கையுடையராய், அதற்குத் தக்கதோர் ஆளைத்தேடத், தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/325&oldid=1626557" இலிருந்து மீள்விக்கப்பட்டது