பக்கம்:மறைமலையம் 3.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
293

குழந்தைகளுக்குக் கைத்தாயாக வைக்கப்பட்டவள் அறிதுயிலுக்கு மிகவும் பொருத்தமுடையவளாகக் கண்டெடுக்கப்பட்டாள். அங்ஙனம் கண்டு எடுக்கப்பட்ட அவளை அவ்வம்மையார் அறிதுயிலிற் போகச் செய்து, தண்ணீர் நிரப்பிய ஒரு கண்ணாடிக் குவளையை ஒரு மேசைமேல் வைத்து, அதில் உள்ள நீரை உற்றுநோக்கி அங்கே தோன்றுகின்ற தோற்றங்களைத் தெரிவிக்கும்படி செய்வர்.

இவ்வாறு செய்து, தொலைவிலுள்ள தம் உற்றார் உறவினர் நண்பர்பால் நிகழ்வனவற்றையெல்லாந் தெளிவாக அறிந்து வந்தார். இதிற் பழக்கப்படுத்திய அப் பெண்பிள்ளை அறிவில்லாதவள் அல்லள்; ஆங்கிலம் நன்றாய்ப் பேசவும் எழுதவும் படிக்கவும் செவ்வையாய்க் கற்பிக்கப் பட்டவள். இவள் இங்ஙனம் பார்த்துச் சொல்லிய தொலை நிகழ்ச்சிகளெல்லாம் நாள்வழியே முற்றும் உண்மைகளாய் முடியக் கண்டு அவ்வாங்கில மாதரார்க்கு அவளது தெளிவுக் காட்சியில் முழுநம்பிக்கை உண்டாயிருந்தது. இஃதிப்படியிருக்க, ஒருநாட் காலையில் பெரும்படைத் தலைவர் ஒருவரை வரவேற்றற் பொருட்டு அவ்வம்மையாரின் கணவர் நேரத்தோடு உணவெடுக்கையில், தம் ஏவலாளைக் கூப்பிட்டுத் தன்னுடுப்புகளை விரைந்தெடுத்து ஒழுங்குபடுத்தி வைக்கச் சொன்னார். அங்ஙனமே செய்யச் சென்ற அவன் சிறிது நேரங்கழிந்தபின் வந்து திகைப்பும் அச்சமும் உடையவனாய்ப் ‘பெருமானே! பணப்பை உள்ள அரைப்பட்டி கையைமட்டுங் காணோம்’ என்று வாய்குழறிக் கூறினான். அதற்கவர் ‘மடத்தனமாய்ப் பேசாதே, நீ வௌவாலைப் போற் கண் குருடாயிருக்க வேண்டும்!’ என்று கூவிச் சொல்லிக் கொண்டே தம் இருக்கையினின்றும் எழுந்து உடுப்பறைக்குட் சென்றார்.

அவர் அதனுட் சென்று தேடிப் பார்த்தும் அதனைக் காணாமையின் மிகவுஞ் சினங்கொண்டு தம் ஏவலாட்களை யெல்லாம் வைய, அவர்கள் தாம் அதனை எடுக்கவில்லை யென்று மிக்க அச்சத்தோடும் கெஞ்சிக் கூறினர். அதன்பின் அவர் உணவுகொள்ளும் அறைக்குத் திரும்பி வந்து, தம் மனைவியைப் பார்த்து ‘இப்போது உன் தோழிக்குள்ள தெளிவுக் காட்சியின் உண்மையை நான் தெரிந்து கொள்வதற்குத் தக்க அமயம் கிடைத்திருக்கின்றது. அவளை இங்கே வருவித்துக் காணாமற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/326&oldid=1626558" இலிருந்து மீள்விக்கப்பட்டது