பக்கம்:மறைமலையம் 3.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
296

❖ மறைமலையம் - 3 ❖

இங்கிலாந்திற்குப் புறப்பட்டுப்போன அன்றைக்கேயாம்,’ என்று முனகினார்.

அதற்கந்த அம்மையார் ‘நாம் விரைவில்அதன் உண்மையைக் காண்போம். அவ்வரைப்பட்டிகை அங்கே கண்டெடுக்கப்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை’ என்றார்.

சிறிது நேரத்திலெல்லாம் போன ஏவலாளும் அவனுடன் சென்றோருந் திரும்பிவரும் அரவம் கேட்டது. அவர்கள் வரும் ஓசையிலிருந்து அப்பொருள் கண்டெடுக்கப்பட்டதென்னும் உண்மை அவ்வம்மையார்க்குத் திண்ணமாயிற்று. அவ்வேவலன் அந்த அரைப்பட்டிகையைத் தலைக்குமேற் பிடித்துக்கொண்டு, அவர்கள் இருந்த மேன்மாளிகைக்கு இரைக்க இரைக்க ஓடிவந்து, அத்தோழிப் பெண் சொன்னவாறே அது கண்டெடுக்கப்பட்டதெனத் தெரிவித்தான்.

இன்னோரன்ன உண்மை நிகழ்ச்சிகளால், நடைத்துயிலின் கண் ஒருவர்க்குள்ள அறிவு விளக்கமானது ஏதொரு கருவியினுதவியையும் வேண்டாது தானாகவே எவ்விடத்தினும் எக்காலத்தினும் நிகழும் நிகழ்ச்சிகளையெல்லாம் அறியவல்ல தாம் உண்மை நன்கு விளங்காநிற்கும். இனி, இம்மூவகைத் துயிலையும் பயன்படுத்திக்கொள்ளும் முறைகளிற் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/329&oldid=1626561" இலிருந்து மீள்விக்கப்பட்டது