பக்கம்:மறைமலையம் 3.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
298

❖ மறைமலையம் - 3 ❖

தம்முடைய சொற்களைக் கொண்டு அவரது நினைவைத் தம்வழிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இனி,இத்துயில் சிறு நோய்களைத் தீர்த்தற்கு ஏற்றதொன்றாய் இருத்தலால் தலைவலி செவிக்குத்தல் கண்ணோய் பல்வலி உடம்புநோய் காய்ச்சல் தேள்கொட்டின வலி முதலியவற்றை இதனுதவியாற் போக்கலாம். ஆனால், இதனுதவியால் நோய்களை நீக்க விரும்புகிறவர் உண்மையாகவே அன்பும் அருளும் நல்லெண்ணமுஞ் செவ்வையான உடம்பும் உடையவராக இருத்தல் வேண்டும். இவ்வினிய இயல்புகள் உடையவர் ஒருவரை அறிதுயிலிற் போகச்செய்து அவரைத் தாட்டு ‘இந்நோய் நீங்குக' என்று சொன்ன அளவிலே, அஃது அவரை விட்டு நீங்குதல் திண்ணம். இதற்குத் தாயானவள் குழந்தையைப் போற்றும் முறையே தக்க சான்றாம். கீழே தவறிவிழுந்து காயம்பட்ட சிறுமகவைத் தாய் பதறிஎடுத்து, அக்காயத்தைத் துடைத்துக் கையால் மெல்லத்தடவி ஆறுதல் மொழிகளால் அதற்கு அத்துன்பத்தைப் போக்கித் தன்மடிமேல் அதனைத் தூங்கவைத்தலை நாம் உற்றுநோக்கும்போது, அவள் இவ்வறிதுயிலுக்குரிய முறைகளைத் தன்னையறியாமலே இனிது செய்கின்றாள் என உணரப் பெறுகின்றோம் அல்லமோ?

அன்புமிகுதியும் உடையார்க்கு இனிய சொல்லும் மெல்லென்ற செயலுந் தாமாகவே வருதல் இயற்கை.ஆதலாற்,பிறர்க்குள்ள நோய் தீர்த்தற் பொருட்டு அவர்பால் அறிதுயிலினை வருவித்தற்குப் பழகுவோர் மலர்ந்த முகமும் இனிய சொல்லும் இனிய செயலும் நோயற்ற உடம்பும் உடையவராயிருக்க முதலிற் பழகிக்கொள்ளல் வேண்டும்.அதனோடு,நோய் கொண்டவர்க்கு அவ்வந்நோய் நீங்குதற்கு ஏற்ற தூய உணவுகளை மாற்றி மாற்றிக் கொடுக்கும் வகைகளையும், அவர் அழுக்கான ஆடைகளை அணியாமலும் நல்ல காற்றும் வெளிச்சமும் இல்லாமற் குப்பை கூளங்கள் மலிந்த அழுக்கான இடங்களில் இராமலும் தம்மைத் துப்புரவாய் வைத்துக் கொள்ளும் முறைகளையும் எடுத்துச் சொல்லுதல் வேண்டும். இக்காலத்து மருத்துவர்கள் காப்பி தேயிலை கோக்கோ இறைச்சி முதலிய நஞ்சான பண்டங்களை அவித்து இறுத்த சாற்றையும், முட்டை ஒயின் முதலான பொருள்களையும்,நச்சுக் காற்று அடங்கிய சோடாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/331&oldid=1626194" இலிருந்து மீள்விக்கப்பட்டது