பக்கம்:மறைமலையம் 3.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
299

தண்ணீரையும் நோயாளிகளுக்கு ஏராளமாய்க் கொடுத்து வருகிறார்கள்.

இவை அத்தனையும் நோயை மிகுதிப் படுத்துவனவே யல்லாமல் அதனைத் தணிப்பன அல்ல என்று இப்பண்டங்களிற் கலந்துள்ள நஞ்சை நன்கு ஆராய்ந்தறிந்த புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர்களே (see for instance Dr. A. Haig' Uric Acid) கூறிவருதலால்,இவ்வுண்மையை அறியாமல் இவற்றை நோயாளிகட்குக் கொடுத்தல் பெருந்தீமைக்கே வழியாம்.ஆகையால், அறிதுயில் முறையால் நோய் நீக்கப் புகுவோர் அந்நோயை நீக்குகையில் அந்நோய்க்கு மேலுமேலும் இடஞ்செய்யும் இத்தகைய பொருள்களை உணவாகக் கொடாமல் தடை செய்தல் வேண்டும்.அது நிற்க.

இனி,நோயாளியை இந்நினைவுத் துயிலிற் போகச் செய்தவுடன், நோயுள்ள இடங்களைக் கையால் தொட்டேனும் தாடாமலேனும் கீழ்நோக்கிப் பலகால் தடவுதல் வேண்டும். இங்ஙனந் தடவுங்கால் ஐந்தாவதான கடைச் சிறுவிரலைச் சிறிது ச் அகற்றி, மற்றை நான்கு விரல்களையும் ஒருங்கு சேர்த்து இரண்டு கைகளாலுங் கீழ்நோக்கித் தடவுக. மேலிருந்து தடவிக் கீழ் இறக்கின கைவிரல்களை உதறிவிட்டுத், திரும்பவும் பக்கச் சாய்வாய்க் கைவிரல்களை மேல் உயர்த்தி முன்போலவே கீழ்நோக்கித் தடவி விரல்களை உதறுக. விரல்களை இங்ஙனம் உதறுதல் ஏன் என்றால், நோயாளியின் நோயைக் கீழ் இறக்கியவுடன் அந்நோய் இதனை நீக்குவோர் கைவிரல் நுனிகளின் வழியே பற்றிக் கொண்டு அவரது உடம்பில் ஏறாதிருத்தற் பொருட்டேயாம். இங்ஙனம் பலகாற் றடவியபின் நோயுள்ள இடங்களின்மேல் வாயினால் கீழ்நோக்கி மெல்ல ஊதி மெல்லிய வாய்க்காற்று அவற்றிற் படும்படி செய்க. வாயினால் இவ்வாறு நேரே ஊதுவதோடு, மெல்லிய தூயதுணியை எட்டு மடிப்புகளாக மடித்து நோயுற்ற இடத்தின்மேல் வைத்துப், பிறகு இத்துணியின்மேல் வாயை வைத்துக் கதகதப்பு உண்டாகுமாறும் ஊதுதல் சில நோய்களுக்குக் கட்டாயம் செய்யப்படுதல் வேண்டும்.

கழலைகள்,கட்டிகள்,வீக்கங்கள்,நரம்புச் சுளுக்குகள்,எரிவுகள் உள்ள இடங்களில் இப்படிச் செய்தல் இன்றியமையாததாகும். ஒருகால் வாயை வைத்து ஊதியபின், மறுபடியுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/332&oldid=1626195" இலிருந்து மீள்விக்கப்பட்டது