பக்கம்:மறைமலையம் 3.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
308

❖ மறைமலையம் - 3 ❖

அன்றைக் காலைமுதல் அவ்வம்மை ஏதோர் உணவும் எடுக்கவில்லை. என்னிடம் அவர் குசுகுசுவென்று பேசுதற்குமேற் பேச இயலவில்லை; அப்படிப் பேசுவதும் மிக்க வருத்தமாகவே இருந்தது; ஏனெனில் அவர் முற்றுங் களைப்படைந்திருந்தார்.

'யான் அப்படுக்கையின் பக்கத்தே அமர்ந்து, அவ்வம்மையார் கைகளில் ஒன்றை என் கையிற் றூக்கி வைத்துக் கொண்டு இப்போது நீங்கள் படுந்துன்பத்தை நீக்கும் பொருட்டு யான் இங்கு வருவிக்கப்பட்டேன்; சிறிது நேரத்தில் நீங்கள் மூச்சுத் தடையின்றி விடுவீர்களென்று எதிர்பார்க்கின்றேன். இப்போது உங்களிடம் யான் ஏதொன்றுங் கேளேன்; நான் உங்களை நோக்கிச் சொல்வனவற்றில் உங்கள் கருத்தைச் சிறிது நேரம் பதியவைக்க வேண்டுவதுதான் எனக்கு வேண்டும். உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள், சிறிது நேரத்தில் எல்லாம் ஓய்வாயிருக்கும் ஓர் உணர்ச்சி உங்கள் உடம்பெங்கும் வரக் காண்பீர்கள்; மூச்சு ஓட்டமும் வரவர நீண்டு ஆழ்ந்து செல்லும். உங்கள் மார்புக் கூட்டின் மேலெல்லாம் யான் கையால் தேய்க்கப் போகின்றேன்; அப்படிச் செய்கையில் மூச்சின் ஓட்டம் வரவரத் தடையின்றிச் செல்லும்,' என்று சொல்லியபடியே மார்பையும் நுரையீரலுக்கு நேரேயுள்ள முதுகையும் வலுவாய்த் தேய்க்கத் துவங்கினேன்; அதே நேரத்தில், நுரையீரல் வரவரத் தடை தீர்கின்றதெனவும், மூச்சோட்டம் ஆழமாய் நீண்டு செல்கின்ற தெனவும், நரம்பு வலியும் அச்சமுங் கவலையும் அகலுகின் வெனவும், வரவரத் தூக்க மயக்கமும் உண்டாகின்றதெனவும், அவருக்கு வேண்டுவன நல்ல உணவுந் தூக்கமுமே யெனவும் இன்னுஞ் சிறிது நேரத்தில் சிறிது சாறு பருகத் தக்கவளவு மூச்சோட்டம் தடையின்றி நிகழும் எனவும், அதன் பிற்றூக்கம் வருமெனவும் கட்டுரை கூறிக்கொண்டே வந்தேன்.

குறிப்பிட்ட இந்த முறையாகப் பத்து நிமிடங்கள் வரையில் தேய்த்த பிறகுங், கட்டுரை கூறிய பிறகும் நோய் கொண்ட அவ்வம்மையார் மிக எளிதாய் மூச்சு விடுதலையும் இரத்த ஓட்டம் சீர்ப்பட்டுச் செல்லுதலையுங் கண்டு உவப்புற்றேன். அதன்பின், மூச்சோட்டம் எளிதாய் நடைபெற நடைபெறச் சாய்ந்து கொள்ள வைத்திருக்குந் தலையணைகளை ஒன்றன்பின் ஒன்றாய் எடுத்துக்கொண்டே வந்து கடைசியாக அவரைப் படுக்கை மட்டத்திற் கிடத்துவோம் என்றுங் கட்டுரைத்தேன். முதல் தலையணையை எடுத்துவிட்டவுடன் அவ்வம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/341&oldid=1626206" இலிருந்து மீள்விக்கப்பட்டது