பக்கம்:மறைமலையம் 3.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
311

கண்டுமிருப்பர்.வெறிகொண்டு எவர்க்கும் எதற்கும் அடங்காமல் ஓடித் திரிந்து உழக்கிய களிற்றியானைகளையுங் குதிரைகள் ஆனேறுகள் நச்சுப்பாம்புகள் வரிப்புலிகள் முதலியவற்றையும் தமது கட்பார்வையாலும் ஒரு சொல்லாலும் அடக்கிய பெரியோரையும் பலர் பார்த்திருப்பர். அமெரிக்காவில் இம்முறைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒருவர் ஒரு மணிக்கு நூற்றிருபது மைல் வழியோடும் ஒரு நீராவி வண்டியை ஒரு நொடியில் ஓடாமல் நிறுத்தி விட்டனரென்று அங்கிருந்துவரும் வெளியீடுகளிற் படித்துணர்ந்திருக்கின்றோம்.இங்ஙனமெல்லாங் கண்கூடாக அறியப்படும் உண்மை நிகழ்ச்சிகளிலிருந்து, நினைவாற்றல் மிகப் பெற்றோரால் உந்தப்படும் மின்னாற்றல் அவர்தங் கண்கள் சொற்கள் விரல் நுனிகள் என்னும் இவற்றின் வழிச்சென்று அரும்பெரும் புதுமைகளை விளைக்க வல்லதாதலை இனிதுணர்கின்றேம் அல்லமோ?

இவ்வாறு உந்தப்படும் மின் ஆற்றலை நோயாளியின் உடம்பிற் செலுத்தினால் அஃது எத்துணை நன்மையை எவ்வளவு விரைவிற் செய்யுமென்பதை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? நோய் தீர்க்கும் நினைவின் முனைப்பினால் உந்தப்படும் மின்சத்தைத் தன்னிடத்து வாங்கி அதனை நோயாளியின் உடம்பிற் செலுத்துதற்கு இடைநின்று உதவும் பொருள்களுள் தண்ணீரே மிகச் சிறந்ததாயிருக்கின்றது. எ ஏனென்றால், நமதுடம்பில் முக்காற்பங்கு நீர்ப்பொருளான இரத்தத்தால் நிறைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விரத்தமே மின்சத்தைத் தன்கண் ஏற்று உடம்பினுள் எங்கும் ஓடி அதனை வளர்த்து வருகின்றது; நுண்ணிய மின் சத்தோடு கலந்து உலாவுதற்கு அதுபோல் ஓடவல்ல நெகிழ்ச்சிப்பொருள் ஒன்றே பயன்படுவதல்லது, ஏனைக் கட்டிப் பொருள்கள் அத்துணைப் பயன்படா. ஆதலால், தூயதண்ணீரில் மின்சத்தை ஏற்றி அதனை நோயாளி பருகுதற்குக் கொடுத்தலே நன்று. தூய குளிர்ந்த ஊற்றுத் தண்ணீர் கிணற்றுத் தண்ணீர் கிடையாதபோது, பனைவெல்லத்தை மந்திரித்துச் சிறு மாத்திரைகளாக்கி ஒரு சிறு புட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு, அவற்றையும் நோயாளிக்குக் கொடுத்துநோய் தீர்க்கலாம். அல்லது, உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையுங்கூட மந்திரித்துக் கொடுக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/344&oldid=1626563" இலிருந்து மீள்விக்கப்பட்டது