பக்கம்:மறைமலையம் 3.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
312

❖ மறைமலையம் - 3 ❖


இனித், தண்ணீரில் நோய் தீர்க்கும் மின்சத்தை ஏற்றுமாறு யாங்ஙனமெனிற் காட்டுதும்; நல்லதோர் ஊற்றிலேனுங் கிணற்றிலேனும் தூய மட்பாண்டத்தில் முகந்தெடுத்துவந்த தூய குளிர்ந்த நீரை ஒரு மட்குடுவையிற் பெய்து, அதனை கையில் வைத்துக்கொள்க. பின்பு, ஒளிவடிவாகிய இறைவனுருவை நினைந்து உள்ளத்தை அவ்வொளிவடிவிற் பொருத்தி, அவ்வொளி நுமது உள்ளத்திற் பாய்ந்து உடம்பெங்கும் நிறைந்து நிற்பதாக நன்றாய் உறுத்தி நினைக்க. அங்ஙனஞ் சிறிது நேரம் நினைந்தபின், வலது கையின் கடைச் சிறுவிரல் ஒழிய ஏனைவிரல்களை ஒன்றன்மேலொன்று படாமற் குவித்து, இடது கையில் உள்ள குடுவைத் தண்ணீர்க்குமேற் பிடிக்க; கண்களையும் இமையாமல் நிறுத்தி, அவ்வாறு குவித்த விரல் நுனிகளில் அவற்றின் பார்வையையும் நிறுத்துக; அதன்பின்,உடம்பில் நிறைந்த அவ்வொளி நும்முடைய கண்களின் வழியாயுங் குவித்த விரல் நுனிகளின் வழியாயும் ஓடி அக்குடுவைத் தண்ணீரிற் பாய்வதாக உறுத்தி நினைக்க; அங்ஙனம் நினைக்கையிலேயே அவ்விரல்களை நடுங்குவது போல் அசைக்க; அதன்பின் ‘நோய் நீக்கும் மின்சத்தால் நிறைந்த இத்தண்ணீர் இந்நோயாளியின் இந்நோயை உடனே நீக்குக!’ என்றும் அடுத்தடுத்து உள்ளே சொல்லிக் கொள்க. இவ்வாறு செய்தானபின், அக்குடுவைத் தண்ணீரை ஒருமணி நேரத்திற்கு ஒருகால் ஒரு வாய்கொண்ட வளவு பருகக் கொடுத்து வருக.


அக்குடுவைத் தண்ணீரை மேன்மூடிகொண்டு இறுக மூடிவைக்க வேண்டும். உள்ளுக்குப் பருகக் கொடுத்தலேயன்றி, ஒருகுடந் தண்ணீரை இங்ஙனமே மந்திரித்துக் கொடுத்து நோயாளி அதனைத் தலையில் விட்டு முழுகவுஞ் செய்யலாம். மட்பாண்டங்களுங் கண்ணாடி ஏனங்களுங் களிம்பு துரு முதலிய நச்சுப்பொருள் இல்லாதன வாகையால், இவைகளே இம்முறைக்குப் பயன்படுத்தத் தக்கவை. செல்வமுள்ளவர்கள் பொன் வெள்ளிகளாற் செய்த ஏனங்களைப் பயன்படுத்தலாம். இவ்வாறு நினைவு முனைப்பால் மின்சத்து ஏற்றப்பட்ட தண்ணீர் பொதுவான தண்ணீரினும் வேறுபாடுடைய தென்பதற்கு, மின்சத்து ஏற்றிய தண்ணீரையும் அஃதேற்றாத தண்ணீரையும் வேற்றுமை தெரிவியாமலே நுண்ணுணர்வு மிக்க ஒரு சிறுமி கையிற் கொடுத்துச் சுவைத்துப் பார்க்கும்படி செய்தால், அவள் அவ்விரண்டற்குமுள்ள சுவை வேறுபாட்டை நன்கறிந்து உரைப்பள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/345&oldid=1626564" இலிருந்து மீள்விக்கப்பட்டது