பக்கம்:மறைமலையம் 3.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
315

‘அறிதுயிற் கட்டுரை’கள் மட்டுமே, ஒருவர் பிறவியிலேயே தம்முடன் கொண்டுவந்த தீய இயற்கைகளை மாற்ற வல்லதாகுமல்லாமல், வேறுபுறத்து முறைகள் எவையும் அவற்றை மாற்ற மாட்டாவென்று திண்ணமாய் உணர்ந்துகொள்க. சிறுபிள்ளைகளாயிருக்கையிலேயே இவ்வறிதுயின் முறைகளால் மக்களைச் சீர்திருத்துதல் எளிது. அவர்கள் வளர்ந்து பெரியரானபின் அவர்களைத் திருத்துதல் அரிது. ஏனென்றால், அவர்கள் தம்மை அறிதுயிலிற் செலுத்துவோர்பால் அணுகவும் மாட்டார், அவர் சொற்களுக்கு இணங்கவும் மாட்டார், ஆனதுபற்றிப், பெரியோர்க்கு அடங்கி நடத்தற்குரிய பிள்ளைமைப் பருவத்திலேயே இம் முறைகளினுதவியால் அவர்களை நல்வழிப்படுத்துதற்கு. பெற்றோர்கள் அனைவரும் முயல்வார்களாயின் உலகத்தில் தீமைகள் அற்றுப்போம். எல்லாரும் நல்லவர்களாய்த் தத்தம் ஆற்றலுக்கேற்ற புகழ் புண்ணியங்களைச் செய்து நீண்ட காலம் இம்மையிலும் இன்பவாழ்க்கையில் வாழ்ந்து, மறுமையிலும் அழியா வீட்டின்பத்தைப் பெறுவர்.

தாய் தந்தையர்க்கும் உவாத்தியாயர்க்குங் கீழ்ப்படியாமல் நடந்து கல்வி பயிலாமற் குறும்பனாய்த் திரியும் ஒரு பையனைத் திருத்துவது யாங்ஙனமெனிற் காட்டுதும்: மேலே காட்டிய ‘அறிதுயிலிற் செலுத்தும் முறைகளில்’ ஒன்றால் அவனைத் தூங்கச் செய்து, அவனை நோக்கிப் பின்வருமாறு சொல்லுக: இப்போது யான் சொல்லுகீறபடி யெல்லாம் நீ கீழ்ப்படிந்து நடக்கக்கடவாய். உன்னை நான் இத்தூக்கத்தினின்றும் எழுப்பிய பிறகு நீ உன் பெற்றோர்க்கும் உவாத்தியாயர்க்குங் கீழ்ப்படிந்து நடக்கக்கடவாய். உனக்குக் கொடுக்கப்படும் பாடங்களை நீ கருத்தாய்ப் படித்து அவற்றில் தேர்ச்சியடையக் கடவாய். சுறுசுறுப்பாய் விளையாட வேண்டும் நேரத்தில் விளையாடிக் கருத்தாய்ப் படிக்க வேண்டும் நேரத்திற் படித்து ஒழுங்காக நடக்கக் கடவாய். நீ கற்பவைகளை யெல்லாஞ் செவ்வையாக நினைவில் வைக்கக்கடவாய். எல்லார்க்கும் இனிய நல்ல பையனாய்நடந்து மேன்மேற் செழிப்புடன் வளரக் கட வாய். கெட்ட பிள்ளைகளோடுங் கெட்ட பெண்களோடும் நீ கலந்து பழகலாகாது. யான் உன்னை எழுப்பியபின், யான் கூறிய இவைகளை யெல்லாம் நினைவுகூர மாட்டாய்; ஆயினும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/348&oldid=1626567" இலிருந்து மீள்விக்கப்பட்டது