பக்கம்:மறைமலையம் 3.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
335

எமது பக்கத்திலிருந்த இரண்டொருவர் வேறு சிலவற்றை மறைத்து வைத்துக்கொள்ள அவைகளையும் அவர் பிசகாமற் சொல்லிவிட்டார்.

அறிதுயின் முறையில் மிகவுந் தேர்ந்த ஒரு துரைமகன் (Carl Sextus) ஒரு சிறு பெண்ணைக்கொண்டு நெடுந்தொலையில் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைச் சொல்லுவித்தனர். அதனை அவர் சொல்லுகிறபடியே இங்கு மொழிபெயர்த் தெழுகின்றாம்:“ஏழு ஆ ண்டுகளுக்குமுன் சுவீடனில் உள்ள காதன்பர்க்கில் யான் இருந்தபோது, புகழ்பெற்ற செல்வர் ஒருவர் இல்லத்தில் அறிதுயிலுண்மையைப்பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தி, அத்துயிலைச் சிலர்க்கு வருவித்துங் காட்டினேன். இங்ஙனஞ் செய்கையில், மந்திரக்கண்ணாடி (Magic mirror)யில் நோக்குதலைக் குறித்து யான் பேச, அச்செல்வர் அதனையுஞ் செய்துகாட்டும்படி என்னைக் கேட்டார். அப்போது அவரது குடும்பத்திற்கு அறிமுகமானவர்களும் நண்பர்களுமாக அங்கே கூடியிருந்த இருபத்தைந்து முப்பது பெயரில், அம்முறையைச் செய்து பார்த்தற்குத் தக்கவர் ஒருவரும் இல்லையென ஒரு நொடிப்பொழுதிற் கண்டு கொண்டேன் கொண்டேன் அன்றுமாலை பத்துமணி நேரம் இருக்கும்.

இதற்குத் தக்கவர் இவ்விவ்வாறு இருக்கவேண்டுமென்று யான் குறித்துக் காட்டியபடி, மிகவும் பொருத்தமாகப் பத்துப் பதினோராண்டுள்ள ஒருமகள் தம்மிடம் அலுவல் பார்க்கும் ஒருவருக்கு இருப்பதாக அக்கூட்டத்தில் இருந்த தரகர் ஒருவர் கூறினார். அச்சிறுமியின் பெயரும் இருப்பிடமும் அவர் சொல்லவே, அவள் அருகாமையிலிருந்தமையால் அவளை அழைத்துவரும்படி விரைவாக ஓர் ஆள் அனுப்பப்பட்டனர். அவள் பெற்றோர்கள் அம்முறையைத் தேர்ந்து பார்த்தற்காக ஏதொரு தடையுஞ் சொல்லாமையால், போனவர் அச்சிறுமியை அழைத்து வந்தார். அச்சிறுமியை அறிதுயிலிற் செலுத்தி, அங்கு வைக்கப்பட்ட மந்திரக் கண்ணாடியை உற்றுநோக்கும்படி செய்தோம்; அப்பெண் வியக்கத்தக்க இயற்கை நுண்உணர்வும் சிறந்த தெளிவுக் காட்சியும் உடையளாயிருந்தாள். ஸ்டோக்கோமில் உள்ள சிற்றரசி ஒருத்தியைக் காணும்படி யான் அவளுக்குச் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/368&oldid=1626591" இலிருந்து மீள்விக்கப்பட்டது