பக்கம்:மறைமலையம் 3.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
343

நோய்களைப் புறக்கண்கள் மட்டும் உடைய மருத்துவர் யாங்ஙனம் உணரவல்லார்? அகத்துள்ள நோயைத் திட்டமாக அறிய மாட்டாமையால், அந்த நோய்க்குத்தக்க மருந்தைக் கொடுக்க ஏலாமல், தகாத மருந்தைக்கொடுத்துப் பிழைபடுகின்றார்கள். நோயாளிகளும் பொருட்செலவு செய்தும் மருந்துண்டும் பயன் பெறாமல் நெடுகத் துன்புற்று உயிரையுந் துறக்கின்றனர். ஆங்கில மருத்துவரிற் பலர் நோயாளிகளின் அகத்தே நோயிருக்கு மிடந்தெரியாமல் நோயில்லா வேறிடங்களை அறுத்துப்பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர்.

அவர்தம் அறியாமையால், அந்நோயாளிகளும் ஆற்றுதற்கரிய துன்பமெய்திச் சாகின்றனர். ஆதலால், மருத்துவப் பயிற்சியோடு, தெளிவுக் காட்சியால் நோயின் தன்மையைக் கண்டறியும் முறைகளிலும் பழகித் தேர்வராயின் அத்தகைய மருத்துவரால் உலகிற்கு விளையும் நன்மைகள் அளவிடப்படா. நோயின் இயல்பு தெளியப்படாமையால் ஒரு நோயாளியும் அவருக்கு மருத்துவஞ் செய்த ஆங்கில மருத்துவருந் தெளிவுக் காட்சியின் உதவியால் அத்துன்பங்களை நீங்கப்பெற்றமைக்கு உண்மையாய் நிகழ்ந்த மற்றொரு வரலாற்றினை மேற்குறிப்பிட்ட அறிதுயிற் புலமை ஆசிரியர் (Dr. James Coates How to thought Read) நூலிலிருந்தெடுத்து மொழிபெயர்த் தெழுதுகின்றாம்: ‘இயற்கையாகவே தெளிவுக்காட்சி என்னும் ஒரு பெரும் பேற்றினை அடைந்து தன்மட்டில்உயிர்வாழும் ஒரு பெருமாட்டிக்கு அறிமுகமாகும் நல்வினையை ஆசிரியர் உவில்ட் என்பவர் பெற்றார். தமக்கு நண்பனாயுள்ளவன் ஒருவன் பல ஆண்டுகளாக ஒவ்வோர் இரவும் பல நாழிகை நேரம் வரையில் முதுகிலும் மார்பிலும் கொடியதொரு நோயுற்று வந்தனனென்றும், நாட்செல்லச் செல்லப் பிறகு அவன் இரவுழுழுதும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க வேண்டியவன் ஆயினா னென்றும், அதனால் அவன் கால்கள் வீங்கத் துவங்கின வென்றும் அவ்வாசிரியர் அப்பெருமாட்டிக்குச் சொல்லினர்.

“இந்த நோயாளி சென்ற மூன்று ஆ ண்டுகளாக லண்டன்மா நகரத்திலுள்ள பலரால் முறையாக மருத்துவஞ் செய்யப்பட்டு வந்தனர். நெஞ்சப்பையில் இன்னதென்று விளங்காத ஏதோ ஒரு பிசகு இருக்கவேண்டுமென்று சிலர் சொன்னார்கள்; வேறுசிலர் அது நரம்புநோய் என்று கூறினர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/376&oldid=1626599" இலிருந்து மீள்விக்கப்பட்டது