பக்கம்:மறைமலையம் 3.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19



2. சூக்குமசரீரங்கள்

இந்த நில உலகத்தில் இயங்கும் இந்த உடம்பு மிகவும் தடிப்பாய்க் கனத்த பொருள்களின் சேர்க்கையால் உண்டானது; ஆகையினாலேதான் இதனைத் தூலதேகம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. கனத்த பொருளான இத்தூலதேகம் மென்மையான காற்றிலும் ஆகாயவெளியிலும் சஞ்சரிக்க மாட்டாததாக இருத்தலின், இஃது உலாவுவதற்கு ஏற்றதான இந்த நில உலகம் நமக்கு வாய்த்திருக்கின்றது. ஆனால், இந்தத் தூலதேகத்தினுள்ளே இன்னும் வேறு நான்கு உடம்புகள் அமைக்கப் பட்டிருக்கின்றன; வெங்காயச் சருகுகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட் டிருத்தல்போல நமக்குள்ள இவ்வுடம் புள்ளும் ஒன்றன்மேல் ஒன்றாக கவிந்திருக்கின்றன; வெங்காயச் சருகுகளில் ஒன்று மற்றொன்றினை ஊடுருவிக் கொண்டு நில்லாது, மற்றுக் கண்ணாடியின் அப்புறத்தே தோன்றின ஒளியானது அதனை ஊடுருவிக்கொண்டு அதன் இப்புறத்தேயும் விளங்குதல்போல இத் தூல உடம்பில் வியாபித்திருக்கின்றன. இந்த நான்கு உடம்புகளும் ஒன்றுக்குமேல் ஒன்று நுண்ணியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இவ்வுடம்பு களின் தன்மையெல்லாம், ஞானசாகரம் 3ஆம் பதுமத்தில் வெளியான சிவராஜ யோகம் என்னும் சொற்பொழிவில் விரிவாக எழுதியிருக்கின்றோம். அங்கே கண்டு கொள்க. இந்த நான்கு உடம்புகளும் சூக்குமசரீரம், குணசரீரம், கஞ்சுக சரீரம், காரணசரீரம் என்று பெயர் பெறும்; அல்லது அவை பிராணமயகோசம். மனோமயகோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமயகோசம் என்று வேறு பெயர் இட்டும் வழங்கப்படும். நமது கண்ணுக்கு எதிரே தோன்றும் இந்தத் தூல வுடம்பானது அழிந்துபோனால், அதற்குள் வியாபித்திருக்கும் மற்ற நான்கு உடம்புகளும் அது போல் அழிந்துபோவதில்லை; அவை நான்கும் உயிரோடு மிக்க ஒற்றுமை உடையனவாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/52&oldid=1626549" இலிருந்து மீள்விக்கப்பட்டது