பக்கம்:மறைமலையம் 3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20

❖ மறைமலையம் - 3 ❖

பிறவிகள் தோறும் தூல உடம்புகளிற் சென்று பிரவேசிக்கும். ஆகவே, மரணம் என்பது சாதாரணமாய் நமக்குள் ஐந்து உடம்புகளில் ஒன்று மாத்திரம் நம்மைவிட்டுப் பிரிந்து அழிந்து போவதை அறிவிக்கின்றது. இங்ஙனம் நம்முடைய ஐந்து கூறுகளில் ஒன்று அழிந்து போவதை உற்று நோக்குங்கால், நாம் இதற்காக ஏன் துக்கிக்க வேண்டும்? என்பது புலப்படும். இந்தத் தூலத்தேகம் போனால் மற்றும் ஒரு தூலதேகம் அவசியம் வரப்போகிறது. இதற்காக நாம் கவலைப்படுவது ஏன்? இதனைக்காட்டிலும் நுட்பமான நம்முடைய மற்ற உடம்புகள் இதுபோல் விரைவில் அழிந்து போகாமையானும், அவ்வுடம்புகளைப் பாதுகாப்பதற்கு நற்செய்கையும் நற்சிந்தனையுமே அவசியமாகுமல்லது தூல உடம்பிற்கு வேண்டும் சோறுந் தண்ணீரும் கூறையும் அல்லவாகலானும், அந்தச் சூக்கும சரீரங்களில் இருந்தே நாம் செய்தற்கு அருமையான பல காரியங்களையும் செய்யலாமாகலானும், நாம் அந்தச் சரீரங்களில் நமது அறிவு நிகழும்படி செய்து கொள்ளல் வேண்டும். நம்முடைய தூலசரீரமானது நாம் நினைத்தபடி யெல்லாம் இயங்கவல்லது அன்று; இடத்தினாலும் காலத்தினாலும் அதன் செய்கைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன; சென்னையிலிருக்கும் ஒருவன் சிதம்பரம் போக எழுந்தானானால் அவன் எவ்வளவு வேகமாய்ச் சென்றாலும் அங்கே போய்ச் சேருவதற்குப் பலநாள் செல்லும்; நம்முடைய சூக்குமசரீரங்களோ அதுபோல் அவ்வளவு மிகுதியாகக் காலத்தினாலும் தினாலும் வரையறுக்கப்படுவனவல்ல; கண்மூடிக் கண் திறப்பதற்குள் பல்லாயிரம் மைல் தூரம் போய்த்திரும்பும் சக்தி உடையன. இதனை மெய்ப்படுத்துதற்கு உண்மையாக நடந்த ஒரு செய்தியை இங்கே எடுத்துக் கூறுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/53&oldid=1628291" இலிருந்து மீள்விக்கப்பட்டது